கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
மதுரை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் கோவையில் இருந்து மதுரை வரும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், அதுபற்றி உடனே மதுரை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள், மதுரை வரும் கோவை ரெயிலில் சோதனை நடத்த வெடிகுண்டு நிபுணர்களுடன் தயாரானார்கள்.
மதுரை ரெயில் நிலையத்திற்கு வந்த கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் போலீசாரும், வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்களும் மெட்டல் டிடெக்டர் கருவி மற்றும் மோப்பநாய் உதவியுடன் அனைத்து பெட்டிகளுக்கும் சென்று அங்குலம் அங்குலமாக சோதனையிட்டனர்.
ஆனால் ரெயிலில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதனால் மர்ம நபர் போனில் கூறிய தகவல் பொய் என்பது தெரியவந்தது. பொய்யான தகவலை கூறி வெடிகுண்டு மிரட்டல் விடுத்து போலீசாரை அலைக்கழித்த மர்ம நபர் குறித்து ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் குருசாமி தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
வெடிகுண்டு மிரட்டல் அழைப்பு வந்த செல்போன் எண்ணை சோதனை செய்தபோது, அது மதுரை மேலூர் பகுதியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அந்த செல்போன் வைத்திருக்கும் நபரை ரெயில்வே போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அவர் மேலூர் அருகே உள்ள வெள்ளலூரை சேர்ந்த போஸ் (வயது35) என்பதும், போனில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது அவர் தான் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
சம்பவத்தன்று கோவையில் இருந்து மதுரைக்கு வந்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் போஸ் பயணம் செய்தபோது அவருக்கும், மற்றொரு பயணிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த நபரை சிக்க வைப்பதற்காக வெடிகுண்டு மிரட்டல் விடுத்தாகவும் போலீசில் போஸ் தெரிவித்துள்ளார்.
அவர் கூறும் தகவல் உண்மை தானா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.