ஆன்லைன் ரம்மி விளையாடிய ஓட்டல் தொழிலாளி தற்கொலை
சேலம் மாவட்டம் முல்லை காட்டை சேர்ந்தவர் குணசீலன்(வயது26). இவரது தம்பி பசுபதி. இவர்கள் மதுரை மாவட்டம் சாத்த மங்கலத்தில் வீடு எடுத்து தங்கியிருந்து தாலுகா நகர் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு ஓட்டலில் ஊழியர்களாக வேலை பார்த்து வந்தனர்.
அவர்கள் கடந்த 6 மாதங்களாக ஓட்டலுக்கு சென்று வேலை பார்த்து வந்தனர். அப்போது குணசீலனுக்கு ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டது. இதனால் அவர் தினமும் ஆன்லைன் ரம்மி விளையாடி வந்தார்.
அப்போது அவர் தனது சம்பள பணம், தனது தம்பியின் சம்பள பணம் ஆகியவற்றை வீட்டிற்கு அனுப்பாமல் அதனை வைத்து ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார். இதில் அவர் கடந்த 6 மாதங்களில் ரூ.5½ லட்சம் வரை இழந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் குணசீலனின் குடும்பத்தினர் தங்களது செலவுக்கு பணம் அனுப்பாததால் அவரிடம் உடனடியாக பணம் அனுப்பும்படி கேட்டு வந்தனர். ஆனால் அவர்களிடம் பணத்தை இழந்தது பற்றி சொல்ல முடியாமல் தவித்த குணசீலன் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் அண்ணாநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குணசீலன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குணசீலன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? ஆன்லைன் ரம்மி விளையாடியதால் அவருக்கு கடன் இருந்ததா? என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சாத்தமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.