கோவை மத்திய சிறை இடம் மாறுகிறது
கோவை மத்திய சிறை காரமடை அருகே உள்ள பிளிச்சி பகுதிக்கு இடமாறுகிறது. இதற்காக கையகப்படுத்தப்பட்ட 95 ஏக்கர் நிலத்தை மாநில உள்துறை செயலாளர் பனீந்தர் ரெட்டி நேற்று பார்வையிட்டார்.
கோவை மத்திய சிறையில் தற்போது 2,350 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறை, செம்மொழிப் பூங்காவாக இடமாற்றம் செய்யப்படுகிறது. இதைத்தொடர்ந்து கோவை மத்திய சிறையை நகரை விட்டு மாற்ற அரசு உத்தரவிட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து மத்திய சிறையை புதிதாக அமைக்க இடம்தேர்வு செய்யும் பணி ஏற்கனவே நடைபெற்றது. காரமடைக்கு அருகே உள்ள பிளிச்சி என்ற இடத்தில் கோவை மத்திய சிறையை அமைக்க தற்போது 95 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப் பட்டுள்ளது. பிளிச்சியில் அமைகிறது
இந்த இடத்தை நேற்று தமிழக உள்துறை செயலாளர் பனீந்தர் ரெட்டி ஆய்வு செய்தார். அப்போது சிறைத்துறை டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம், சிறை சூப்பிரண்டு ஊர்மிளா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். சிறைக்கு மேலும் கூடுதல் நிலம் தேவைப்படுவதாக உள்துறை செயலாளரிடம் தெரிவிக்கப்பட்டது. கூடுதல் நிலம் கையகப்படுத்தும் பணியை தீவிரப்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். அரசு நிதி ஒதுக்கீடு செய்ததும், இந்த சிறை 3 ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
உள்துறை செயலாளர் பனீந்தர் ரெட்டி கோவை மத்திய சிறைக்கு வந்து பார்வையிட்டார். கைதிகளுக்கு வழங்கப்படும் உணவை சாப்பிட்டு பார்த்தார். கைதிகளுக்கான அடிப்படை வசதிகளையும் அவர் ஆய்வு செய்தார்.