`கணக்கு வராது; செக்யூரிட்டிக்கு செல்ஃபி சர்ப்ரைஸ்!’- சென்னை போலீஸ் கமிஷனரின் 40 வருட ஃப்ளாஷ்பேக்
சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்த போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், தன்னுடைய மலரும் நினைவுகளை சக நண்பர்களுடன் பகிர்ந்துள்ளார்.
சென்னை அம்பத்தூரில் உள்ள சர் ராமசாமி முதலியார் பள்ளியில் 1979-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி படித்த மாணவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் 1979-ம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தன்னுடைய மலரும் நினைவுகளை சக நண்பர்களுடன் பகிர்ந்துள்ளார். இந்த நிகழ்வில் பூந்தமல்லி தொகுதியின் எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சி.டி.பிரபாகர், முன்னாள் கவுன்சிலர் பிரகாஷ், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் சந்தித்த மாணவர்கள் அனைவரும் தாங்கள் பயின்ற வகுப்புகளுக்கு ஆர்வத்துடன் சென்றனர். அங்கு சென்று 1979-ம் ஆண்டு அமர்ந்த இருக்கைகளில் அமர்ந்துகொண்டு கடந்த கால நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர். தங்களுக்கு பாடம் கற்பித்துக் கொடுத்த ஆசிரியர்கள், ஆசிரியைகளும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். அவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதோடு ஒவ்வொருவரும் தங்களின் அன்றைய, இன்றைய வாழ்க்கை குறித்துப் பேசினர்.
சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பேசும்போது, இந்தப் பள்ளியில் நான் 1976 முதல் 1979-ம் ஆண்டுவரை படித்தேன். 8-ம் வகுப்பில் இந்தப் பள்ளியில் சேர்ந்த நான், எஸ்.எஸ்.எல்.சி வரை பயின்றேன். நான் சாரசரி மாணவன்தான். எனக்கு கணக்குப்பாடம் சரியாக வராது. அதனால் என் மீது கணக்குப்பாடம் நடத்திய ஆசிரியர், ஆசிரியைகள் கூடுதல் அக்கறை செலுத்தி கற்றுக்கொடுப்பார்கள். என் அப்பாவின் பணிமாறுதல் காரணமாக நான் பல பள்ளிகளில் படித்திருந்தாலும் இந்தப் பள்ளியை என்னால் மறக்க முடியாது. இன்று நல்ல பதவியில் இருக்கிறேன். இதற்கெல்லாம் காரணம் என்னை ஊக்கப்படுத்திய ஆசிரியர்கள்தான்" என்றார். 1982-ம் ஆண்டு இந்தப்பள்ளியில் படித்த பூந்தமல்லி தொகுதியின் எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி பேசுகையில்,
இந்தப் பள்ளியில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டிகள்தான் என் அரசியல் வாழ்க்கைக்கே வித்திட்டது. குறிப்பாக எனக்கு பாடம் நடத்திய ஆசிரியர் அருணாசலம் சார்தான் என்னை அதிகளவில் ஊக்கப்படுத்தினார். அவர் இன்று உயிரோடு இல்லை” என்றார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சி.டி.பிரபாகர் பேசும்போது, தாயின் அன்புக்கு ஈடுஇணை இந்த உலகில் எதுவும் கிடையாது. அதுபோலத்தான் ஆசிரியர்களின் அன்பு. இதற்கு உதாரணமாக ஒரு குட்டிக் கதையைச் சொல்ல விரும்புகிறேன். வகுப்பறையில் திருட்டுச் சம்பவம் ஒன்று நடக்கிறது. உடனே அதைத் திருடிய நபரைக் கண்டுபிடிக்க ஆசிரியர், அனைவரும் கண்களை துணியால் கட்டிக்கொள்ளுங்கள் என்று சொல்கிறார். பிறகு, திருடப்பட்ட பொருள் கிடைத்து அது உரியவரிடம் ஒப்படைக்கப்படுகிறது. இந்தச் சம்பவம் நடந்த சில ஆண்டுகளுக்குப்பிறகு பொருளைத் திருடிய மாணவன், ஆசிரியரைச் சந்திக்கிறார். அப்போது சார், என்னை ஞாபகம் இருக்கிறதா என்று அந்த மாணவன் கேட்கிறார். அப்போது ஆசிரியருக்கு அந்த மாணவன் ஞாபகத்துக்கு வரவில்லை . உடனே சார், நான்தான் உங்கள் வகுப்பில் திருடினேன் என்று கூற அதற்கு ஆசிரியர் அளித்த பதிலைக் கேட்டு மாணவன் திக்குமுக்காடி விட்டான். ஏனெனில் மாணவர்கள் மட்டுமல்ல; அன்றைக்கு நானும் என் கண்ணை கட்டிக்கொண்டுதான் உன்னிடமிருந்த பொருளை வாங்கினேன் என்று கூறினார். இதுதான் ஆசிரியரின் அன்பு" என்றார். 1979-ம் ஆண்டு படித்த முன்னாள் கவுன்சிலர் பிரகாஷ் பேசும்போது
இந்தப் பள்ளியில் படித்தவர்கள் இன்று நல்ல நிலைமையில் உள்ளனர். குறிப்பாக 1979-ம் ஆண்டு படித்த மாணவர்கள் உயர்பதவியில் இருந்துவருகின்றனர். அறிஞர்களாகவும் விஞ்ஞானிகளாகவும் காவல்துறையில் உயர்பதவியிலும் உள்ளனர்” என்றார்.
இதையடுத்து நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆசிரியர், ஆசிரியைகளுக்கு 1979-ம் ஆண்டு பேட்ஜ் மாணவர்கள் என்ற வார்த்தைகள் பதிந்த வெள்ளி நாணயம் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. அதோடு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.
1979-ம் ஆண்டு பேட்ஜில் 220-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துள்ளனர். அவர்களில் 20 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை. சில மாணவர்களும் ஆசிரியர்களும் இறந்துவிட்டனர். அவர்களுக்கு நினைவஞ்சலியை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் செலுத்தினர். குடும்பத்தோடு கலந்துகொண்டவர்கள், 50-வது ஆண்டை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று வாட்ஸ்அப் குழுவை ஒன்றையும் ஆரம்பித்து சேட்டிங் செய்யத் தொடங்கியுள்ளனர். 40 ஆண்டுகளுக்குப்பிறகு சந்தித்தவர்களுக்கு இந்தச் சந்திப்பு வாழ்க்கையில் மறக்க முடியாது என்று மட்டும் அவர்களின் பேச்சிலிருந்து புரிந்தது.
சந்திப்பு நிகழ்ச்சிக்குப் பின்னர், அந்தப் பள்ளியின் காவலருடன் கமிஷனர் விஸ்வநாதன் செல்ஃபி எடுத்துக்கொண்டிருக்கிறார். அத்தோடு, அதை உடனடியாக பிரின்ட் போட்டு அந்தக் காவலருக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்