புதுச்சேரி நெட்டப்பாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் விபல்குமார் கடந்த 21-ம் தேதி காவல்நிலைய வளாகத்தில் உள்ள ஓய்வறையில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்தார். அவர் தற்கொலை செய்துகொண்டார் என்று காவல்துறையினர் கூறிவரும் நிலையில் அந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரின் உறவினர்கள் கூறி வருகிறார்கள்.
உடலை வாங்க மறுத்து சாலை மறியல்
புதுச்சேரியை உலுக்கிய இந்தச் சம்பவத்தையடுத்து, அந்தக் காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் கொடுத்த அழுத்தத்தால்தான் விபல்குமார் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறிய உறவினர்கள், அவர் மீது நடவடிக்கை எடுக்கும்வரை உடலை வாங்க மாட்டோம் என்றுகூறி சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றி உத்தரவிட்ட முதல்வர் நாராயணசாமி, விபல்குமாரின் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாயும் அவர் மனைவிக்கு அரசுப் பணியும் வழங்கப்படும் என்று அறிவித்தார். தொடர்ந்து இன்ஸ்பெக்டர் கலைச்செல்வனை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்தது காவல்துறைத் தலைமை.
காவல் நிலைய ஓய்வறை
இந்நிலையில் உயிரிழந்த எஸ்.ஐ விபல்குமாரின் தந்தை பாலு நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “என் மகன் விபல்குமார் நெட்டப்பாக்கம் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தார். கடந்த 21-ம் தேதி அவர் இறந்துவிட்டதாக எங்களுக்குத் தாமதமாகத் தகவல் கூறினார்கள்.
மேலும், எங்களிடம் புகாரைப் பெறாமல், என் மகனின் மாமனாரிடமிருந்து புகாரைப் பெற்று தற்கொலையாகப் புகாரில் சித்திரித்துள்ளனர். என் மகன் எழுதியதாகக் கூறப்படும் டைரியை என்னிடம் சம்பவத்தன்று காண்பிக்கவே இல்லை. மறுநாள் தான் எஸ்.பி அலுவலகத்தில் வெவ்வேறு கையெழுத்துடன் இருக்கும் 3 பக்கங்களைக் காட்டினார்கள். ரூ.5 லட்சம் மாமூல் கேட்டு உயரதிகாரிகள் என் மகனை டார்ச்சர் செய்திருக்கின்றனர். மேலும், பாலியல் வழக்கில் பேரம்பேசி வழக்கு போடாமலும் தடுத்துள்ளனர்.
இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன்
என் மகன் சாவுக்கு இதுதான் காரணம். தற்போது சி.பி.சி.ஐ.டி விசாரணை நடைபெற்றுவரும் வேளையில் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், எஸ்.பி ரங்கநாதன், கலைச்செல்வனின் சகோதரர் எஸ்.ஐ கலையரசன் ஆகிய 3 பேரும் சேர்ந்து இந்த வழக்கை திசைமாற்ற பல்வேறு முயற்சிகளைச் செய்து வருகின்றனர்.
எங்களை மிரட்டுகிறார்கள். எனவே, இது நியாயமான விசாரணையாக இருக்காது என்ற அடிப்படையைக் கருத்தில் கொண்டு, உடனடியாக சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அப்படி சி.பி.ஐ-க்கு மாற்றப்படாத பட்சத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யவும் தயாராக இருக்கிறோம்” என்றார் கொதிப்புடன்.
ச.அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர்.