தபால் பொருட்களுடன் சைக்கிளை திருடியவர் கைது
மதுரை பசுமலையை சேர்ந்த ரவிச்சந்திரன் மகள் திவ்யா (27). மத்திய அரசு அலுவலகத்தில் தபால் டெலிவரி ஊழியராக உள்ளார். சம்பவத்தன்று மதியம் இவர் சைக்கிளில், தபால் பொருட்களுடன் சென்றார். திருப்பரங்குன்றம் ரோட்டில் ஒரு வீட்டுக்கு தபால் கொடுக்க வேண்டி இருந்தது. அங்குள்ள போலீஸ் பூத் அருகே, சைக்கிளை நிறுத்தினார்.
திரும்பி வந்து பார்த்த போது தபால் பொருட்களுடன் சைக்கிளை யாரோ திருடி சென்று விட்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் சுப்பிரமணியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதன் அடிப்படையில் பைக்காரா முத்துராமலிங்கபுரம் மேட்டு தெருவை சேர்ந்த பாண்டியை (46) கைது செய்தனர்.
மதுரை புதுராமநாதபுரம் ரோடு ஜவகர் சாலையை சேர்ந்தவர் டார்ஜான் ராஜா(வயது35). தொழிலாளியான இவர் சம்பவத்தன்று இரவு மதுரை-ராமேசுவரம் ரிங் ரோட்டில் நடந்து சென்றார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரை தாக்கி செல்போனை பறித்துச் சென்றனர். இது தொடர்பாக சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பசுமலை ராயப்பன் நகரை சேர்ந்த சுரேந்திரன் மகன் ராஜசேகர் (21). சம்பவத்தன்று இரவு இவர் வீட்டின் முன்பு தனது பைக்கை நிறுத்தியிருந்தார். காலையில் எழுந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பைக்கை திருடிய கீழமுத்துப்பட்டி வீரமுடையான் தெருவை சேர்ந்த மணிகண்டன் மகன் மதன்குமாரை (22) கைது செய்தனர்.