கோவை வனக்கோட்டத்தில் 6 வயது ஆண் யானையின் தந்தங்கள், எலும்புகள் கண்டெடுப்பு
கோவை மாவட்டம் போளுவாம்பட்டி வனசரகத்திற்குட்பட்ட நரசீபுரம் பிரிவு, ரத்தப் பாறை வனப்பகுதியில் வனப்பணியாளர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு இறந்த ஆண் யானையின் மண்டையோடு, 2 தந்தங்கள் மற்றும் எலும்புகள் கிடந்தது. இதை பார்த்த வன ஊழியர்கள் சம்பவம் குறித்து வனத்துைற உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து இன்று காலை 10 மணியளவில் கோவை வனக்கோட்ட வன விரிவாக்க அலுவலர் தலைமையில் போளுவாம்பட்டி வனச்சரக அலுவலர் மற்றும் வனப்பணியாளர்கள் முன்னிலையில் ஆனைமலை புலிகள் காப்பக வனக்கால்நடை மருத்துவர் சுகுமார் இறந்த ஆண் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தார்.
பிரேத பரிசோதனையில் இறந்தது ஆண் காட்டு யானை என்பதும், 5 முதல் 6 வயது வரை இருக்கலாம். மேலும் இந்த யானை இறந்து 90 முதல் 120 நாட்களுக்கு மேலாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.