கல்லூரி மாணவரை கத்தியால் குத்தி வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் கைது
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பராசக்தி காலனியை சேர்ந்தவர் நூர் முகமது (வயது 18). இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.
இந்த நிலையில் நூர் முகமது ரம்ஜான் விடு முறைக்காக, மதுரை பழங்காநத்தத்தில் வசிக்கும் மாமா-சித்திக் வீட்டுக்கு வந்திருந்தார். அதன் பிறகு அவர் பைபாஸ் ரோடு வழியாக ஆரப்பாளையம் பஸ் நிலையத்துக்கு நடந்து சென்றார். அப்போது அங்கு ஒரு மோட்டார் சைக்கிள் 2 பேர் வந்தனர். அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி நூர் முகமது வைத்திருந்த ‘செல்போனை கொடு’ என்று கேட்டனர். அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த 2 பேரும் அவரை கத்தியால் குத்தி காயப்படுத்தினர்.
இதனை தொடர்ந்து அந்த கும்பல் நூர் முகமது விடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர். இதுபற்றி நூர் முகமது கரிமேடு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப் பட்டிருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
அதில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரது உருவங்கள் பதிவாகி இருந்தன. அதை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வழிப்பறியில் ஈடுபட்ட அருள்தாஸ்புரம் தவளை என்ற சரவணன் (22), கரிமேடு யோகானந்த சாமி மடம் தெரு, ஹனிபா மகன் சல்மான் அகமது (19) ஆகியோரை கைது செய்தனர்.