வேடசந்தூரில் இன்று பழுதாகி நின்ற வேன் மீது லாரி மோதி 2 பேர் பலி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் இருந்து காலிபிளவர் ஏற்றிக்கொண்டு ஒரு மினி வேனில் மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தனர். வேனை கிருஷ்ணகிரியை சேர்ந்த சங்கர் (வயது26) என்பவர் ஓட்டி வந்தார். மேலும் அதே பகுதியை சேர்ந்த தர்ஷன் (20). கோவிந்தசாமி (18) ஆகியோரும் வந்தனர்.
வேன் இன்று அதிகாலை திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகில் உள்ள ரெங்கநாதபுரம் பகுதியில் வந்துகொண்டிருந்தபோது திடீரென டயர் வெடித்து பழுதானது. உடனடியாக டிரைவர் மற்றும் தர்ஷன் ஆகியோர் பழுதான டயரை அகற்றி விட்டு வேறு டயர் மாற்றும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். கோவிந்தசாமி தனது செல்போன் மூலம் டார்ச் அடித்து பின்னால் வந்த வாகனங்களை திருப்பி விடும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.
அப்போது மகாராஷ்டிராவில் இருந்து வெங்காய லோடு ஏற்றிக்கொண்டு ஒரு லாரி தூத்துக்குடி நோக்கி வந்து கொண்டிருந்தது. லாரியை நாமக்கல்லை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் ஓட்டி வந்தார். கோவிந்தசாமி வாகனங்களை திருப்பி விட்டுக்கொண்டிருந்த போது அதை கவனிக்காமல் மின்னல் வேகத்தில் வந்த லாரி பழுதாகி நின்ற வேன் மீது பயங்கரமாக மோதியது. இதில் வேனுக்கு அடியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சங்கர் மற்றும் தர்ஷன் ஆகியோர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
இது குறித்து கூம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாரும் நெடுஞ்சாலை ரோந்து போலீசாரும் சம்பவ இடத்துக்கு வந்து விபத்தில் பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்தை ஏற்படுத்திய முத்துக்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த இடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் அந்த வாகனங்களை நெடுஞ்சாலை ரோந்து பணியினர் அகற்றி போக்குவரத்தை சரிசெய்தனர்.