கோவையில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் கோவையில் உள்ள 3 வணிக வளாகங்களில் உள்ள தியேட்டர்களில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. கோவையில் ஒரு சில அமைப்புகள் படத்தை திரையிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர்.
இதனை முன்னிட்டு ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் வெளியாகி உள்ள 3 வணிக வளாகங்கள் முன்பு 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் தடையையும் மீறி இன்று புரூக் பாண்ட் ரோட்டில் உள்ள வணிகவளாகத்தை தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழக நிர்வாகிகள் மத்திய மாவட்ட பொறுப்பாளர் சர்புதீன் தலைமையில் திரண்டு முற்றுகையிட திரண்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
ஆனால் தடுப்புகளையும் மீறி த.மு.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் 25-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் குண்டு, கட்டாக தூக்கி கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திரைப்படம் வெளியாகி உள்ள வணிக வளாகத்தில் போடப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநகர போலீஸ் துணை கமிஷனர் சந்தீஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
3 வணிக வளாகங்களில் தி கேரளா ஸ்டோரி படம் திரையிடப்படுகிறது. பாதுகாப்பு கருதி மாநகர் முழுவதும் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் படத்தை பார்க்க வரும் போது சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
மெட்டல் டிடெக்டர் மூலமாக பொதுமக்கள் அனைவரையும் சோதனை செய்த பின்னரே மால்களில் அனுமதிக்கப்படுகின்றனர். உடைமைகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படும். எனவே தியேட்டர்கள், வணிக வளாகங்கள் மட்டுமின்றி கோவை மாநகரம் முழுவதும் போலீஸ் பாது காப்பு போடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.