குற்றாலம் அருகே வெட்டிக்கொலை: பழ வியாபாரி கொலையில் 2 பேர் கைது
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள வல்லம் பகுதியை சேர்ந்தவர் சுடலை (வயது 41). பழ வியாபாரி. இவர் குற்றால சீசன் காலங்களில் கேரளாவில் இருந்து ரம்டான் பழங்களை மொத்தமாக வாங்கி வந்து விற்பனை செய்வது வழக்கம்.
தற்போது குற்றால சீசன் தொடங்க உள்ள நிலையில் ரம்டான் பழங்களை ஏலம் எடுப்பதற்காக சுடலை கேரளாவிற்கு சென்றுள்ளார். அப்போது, அதே ஏலத்தில் வல்லம் பகுதியை சேர்ந்த காளிதாஸ் என்பவரும் பங்கேற்றுள்ளார். கடும்போட்டியில் சுடலை ஏலம் எடுத்துவிட்டார்.
இதனால், ஆத்திரம் அடைந்த காளிதாசுக்கும், சுடலைக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று குற்றாலம் அருகே வல்லம் பகுதியில் உள்ள சுடலைமாடன் கோவில் அருகில் சுடலை நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காளிதாசும், அவரது கூட்டாளி ஒருவரும் சேர்ந்து அரிவாளால் சுடலையை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர்.
இதுகுறித்து குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். சம்பவ இடத்தை தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், துணை சூப்பிரண்டு நாகசங்கர் ஆகியோரும் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தலைமறைவான காளிதாஸ் உள்ளிட்ட 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வந்த நிலையில் காளிதாசை நேற்று மாலை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், கடந்த 1 வருடத்திற்கு முன்பு ரம்டான் பழங்களை ஏலம் எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் சுடலை மற்றும் அவரது கூட்டாளிகள் காளிதாசை வெட்டியதாகவும், இதில் அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதும் தெரிய வந்தது. அந்த முன்விரோதம் இருந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அவர்களுக்குள் ஏலம் எடுப்பதில் பிரச்சினை ஏற்பட்டதால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது தெரியவந்தது.
இதில் தொடர்புடைய மற்றொரு கொலையாளியான சங்கர் என்பவர் ஆலங்குளம் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் பதுங்கி இருந்தார். அவரையும் போலீசார் இன்று அதிகாலை கைது செய்தனர். இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்