மதுரை திருமங்கலம் அருகே காரில் துப்பாக்கி- 113 தோட்டாக்கள் பறிமுதல்
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிமொழி, வனிதா மற்றும் போலீஸ்காரர் நாகராஜன் ஆகியோர் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
குராயூர்-மொச்சிக்குளம் பகுதியில் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக ஒரு கார் வந்தது. மிகவும் மெதுவாக வந்த அந்த காருக்குள் இருந்தவர்கள் டார்ச்லைட்டை அடித்தபடி இருந்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் காரை நிறுத்துமாறு சைகை காண்பித்துள்ளனர்.
போலீசாரை கண்டதும் காரில் வந்தவர்கள் காரை நிறுத்தாமல் வேகமாக சென்றனர். இதையடுத்து போலீசார் அவர்களின் பின்னால் துரத்தி சென்றனர். அரசப்பட்டி-கீழக்கோட்டை செல்லும் சாலையில் முத்துமாரி தோட்டம் என்ற பகுதிக்கு வந்தபோது காரில் வந்த 2 பேர் காரை அங்கேயே நிறுத்திவிட்டு இருட்டுக்குள் ஓடி தப்பி சென்று விட்டனர்.
அவர்களை துரத்தி வந்த போலீசார், காருக்குள் சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் துப்பாக்கி மற்றும் 113 தோட்டக்கள், 2 காலி கேஸ்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், காரில் வந்தவர்களை அந்த பகுதியில் தேடினர். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை.
இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட கார், துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். காரின் பதிவு எண்ணை வைத்து அந்த கார் யாருடையது? என்று போலீசார் துப்பு துலக்கி வருகின்றனர்.
மேலும் அந்த காருக்குள் திருமங்கலம் காளிமுத்து நகரை சேர்ந்த பாலகணேஷ் என்பவரின் ஆதார் அட்டை, பெரம்பலூர் மாவட்ட ரைபிள் கிளப் லைசன்ஸ் உள்ளிட்டவைகள் இருந்தன. அவற்றையும் கைப்பற்றிய போலீசார் தப்பி சென்ற 2 பேரையும் தேடி வருகின்றனர்.
தப்பி ஓடியவர்கள் வேட்டையாடுவதற்காக காரில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை கொண்டு சென்றார்களா? அல்லது வேறு ஏதேனும் சதிச்செயலில் ஈடுபட கொண்டு சென்றனரா? என்பது அவர்கள் சிக்கினால் தான் தெரியவரும். இதனால் அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்