கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் ரகளையில் ஈடுபட்ட போதை வாலிபர்களுக்கு தர்மஅடி
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள புளியங்குடி கிராமத்தில் நேற்று ஒருவர் இறந்து விட்டார். இவரது உடலை அடக்கம் செய்வதற்கு இறுதி சடங்கு நடந்தது. இதில் பங்கேற்க வந்தவர்களில் 6 வாலிபர்கள் போதையில் இருந்துள்ளனர்.
இறுதி சடங்கு நடந்த பகுதியில் இருந்த ஒரு வீட்டின் தென்னை மரத்தில் இருந்த தேங்காய்களை பறித்தனர். இதனை அங்கிருந்த ஆறுமுகம் தட்டி கேட்டார். இதில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர்கள் அவரை தாக்கினர். இதைதடுக்க வந்த ஆறுமுகத்தின் மகன் சீனிவாசனையும் அவர்கள் தாக்கினர். தொடர்ந்து அப்பகுதியினர் திரண்டு வந்த நிலையில் 6 வாலிபர்களும் தப்பி ஓடிவிட்டனர்.
இதைத்தொடர்ந்து, இரவு 11 மணிக்கு அந்த வாலிபர்கள் மீண்டும் புளியங்குடி பகுதிக்கு பட்டாக்கத்திகளுடன் வந்து, அந்த பகுதியினரை ஆபாசமாக திட்டி மிரட்டி ரகளையில் ஈடுபட்டனர். அங்கிருந்த அப்பாஸ் (வயது 38) என்பவரை ஓட ஓட விரட்டி கத்தியால் வெட்டினர்.
இதையடுத்து அப்பகுதி மக்கள் திரண்டு வந்து அவர்களை பிடிக்க முற்பட்டனர். அதில் 2 பேர் மட்டும் பொதுமக்களிடம் பிடிபட்டனர். மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர். பிடிப்பட்ட 2 பேரையும் கம்பத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
மேலும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்ட வாலிபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, அப்பகுதி மக்கள் விருத்தாசலம்-உளுந்தூர்பேட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் பொதுமக்களை சமாதானம் செய்து, கலைந்து போக செய்தனர். கத்திவெட்டில் படுகாயமடைந்த அப்பாசை விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் பிடிப்பட்ட 2 வாலிபர்களையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.