தேனி மாவட்டத்தில் அரிசிக்கொம்பன் யானை பிடிபட்டது
தேக்கடி, இரவங்கலாறு, ஹைவேவிஸ், குமுளி, லோயர்கேம்ப் பகுதிகளில் சுற்றித் திரிந்த அரிசி கொம்பன் கடந்த மே மாதம் 27-ந்தேதி கம்பம் நகருக்குள் புகுந்தது.
அப்போது சாலையோரம் இருந்த இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களை அடித்து நொறுக்கி வலம் வந்ததைப் பார்த்து பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். அதன் பிறகு சுருளிப்பட்டி வழியாக கூத்தநாச்சியார் கோவில் பகுதியை அடைந்தது.
அதன் பிறகு சண்முகா நதி அணையைச் சுற்றியே வலம் வந்த அரிசி கொம்பன் அங்குள்ள பெருமாள் கோவில் பகுதியில் முகாமிட்டது. யானையை பிடிக்க வனத்துறையினர் தற்காலிக சோதனைச்சாவடி அமைத்து கண்காணித்து வந்தனர். மேலும் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க மருத்துவக்குழுவினரும் தயார் நிலையில் இருந்தனர். ஆனால் யானை சமத ளப்பகுதியில் வந்தால் மட்டுமே மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடியும் என காத்திருந்தனர்.
இதற்காக ஊட்டி தெப்பக்காடு பகுதியில் இருந்து சுயம்பு, அரிசி ராஜா, உதயன் ஆகிய 3 கும்கி யானைகளும் வர வழைக்கப்பட்டு கம்பம் வனச்சரக அலுவலகத்தில் தயார் நிலையில் நிறுத்தப் பட்டு இருந்தன.
கடந்த 2 நாட்களாக சண்முகா நதி அணையை ஒட்டியுள்ள சின்ன ஓவுளாபுரம், எரசக்க நாயக்கனூர் காப்புக்காடு பகுதிகளிலேயே சுற்றி வந்தது. இதனால் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க நேற்று இரவே வனத்துறையினர் தயார் நிலைக்கு வந்தனர்.
இதுகுறித்து உத்தமபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் சின்ன ஓவுளாபுரம் பகுதிக்கு வரவழைக்கப்பட்டனர். மின்வாரிய அதிகாரிகளுக்கும் முன் கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டு ஆனைமலையான்பட்டி, கோகிலாபுரம், ராயப்பன் பட்டி, சின்ன ஓவுளாபுரம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்பட்டது.
இரவு 11.30 மணியளவில் சண்முகாநதி பெருமாள் கோவிலில் இருந்து தனியார் பட்டா நிலத்துக்கு அரிசி கொம்பன் யானை நடந்து வந்த போது அதன் மீது மருத்துவக்குழுவினர் மயக்க ஊசி செலுத்தினர். இந்த மயக்க ஊசி யானையின் உடல் பாகங்களை சில மணி நேரங்கள் செயல் இழக்கச் செய்து அதனை அசைவற்ற நிலையில் வைத்திருக்கும் என மருத்துவக்குழுவினர் தெரிவித்தனர்.
மயக்க ஊசி செலுத்திய பிறகு சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக அரிசி கொம்பன் அங்கும் இங்கும் நடந்து பின்னர் கீழே விழுந்தது. அதனைத் தொடர்ந்து யானையை ஏற்றுவதற்கு லாரி சம்பவ இடத்துக்கு கொண்டு வரப்பட்டது.
மேலும் கம்பம் வனச்சரக அலுவலகத்தில் இருந்து கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு அரிசி கொம்பன் யானையை லாரியில் ஏற்றினர். இப்பகுதியில் பெரும்பாலான கிராமங்கள் இருப்பதால் மின் வயர்கள் தாழ்வாக செல்லும் வகையில் உள்ளது.
மிக உயரமான லாரி யானையை ஏற்றிச் செல்லும் போது மின்சாரம் தாக்கி அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கவே யானை நகரை விட்டு வெளியேறும் வரை மின் வினியோகம் நிறுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன்படி இரவு 11.30 மணிக்கு தொடங்கிய அரிசி கொம்பன் ஆபரேசன் அதிகாலை 5 மணி அளவில் வெற்றிகரமாக முடிவு பெற்றது.
கடந்த 1 வாரமாக சுருளிப்பட்டி, காமய கவுண்டன்பட்டி, கம்பம், ராயப்பன்பட்டி, ஆனை மலையான்பட்டி ஆகிய பகுதி மக்களை தூங்க விடாமல் செய்த அரிசி கொம்பன் பிடிபட்டதால் மக்கள் நிம்மதியடைந்தனர். யானை ஏற்றிச் செல்லப் பட்ட லாரிக்கு முன்னும் பின்னும் 30-க்கும் மேற்பட்ட வனத்துறை வாகனங்கள் அணிவகுத்து சென்றன. இதனை சாலையின் இரு புறமும் ஏராளமான மக்கள் நின்று ஆர்வமுடன் பார்த்தனர்.
இந்த யானை ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் விடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 1 வாரமாக யானை நடமாட்டத்தால் கம்பம், சுருளி அருவி, காமயகவுண்டன்பட்டி, சின்ன ஓவுளாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தோட்டத்தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த தடை உத்தரவு இன்று முதல் வாபஸ் பெறப்பட்டதால் தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்கு திரும்பினர்.