2 மாத தேடுதலுக்கு பிறகு தாய்மாமனை வெட்டிய வாலிபர் கைது
தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ள மூங்கில் மடுவு கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது45). விவசாயியான இவருக்கும், இவரது பக்கத்து ஊரான, வெற்றிலை தோட்டத்தில் குடியிருக்கும் அக்கா மகன் சூரிய பிரகாஷ் (30), என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாக நிலத்தகராறு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் பிரச்சினைக்குரிய விவசாய நிலத்தில், விவசாயம் செய்ய சூரிய பிரகாஷ் தாய் வந்ததாகவும், அப்போது அவரை, பெருமாள் தடுத்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 9-ம் தேதி பிற்பகலில் சூரிய பிரகாஷ் தனது அடியார்களுடன் வந்து, மூங்கில் முடிவு பேருந்து நிலையத்தில் உள்ள, கடையில் அமர்ந்திருந்த தனது தாய் மாமன் பெருமாளை, சரமாரியாக வெட்டி உள்ளார்.
இதில் பெருமாளின் கை துண்டானது. கழுத்து, தலை, நெற்றி உள்ளிட்ட பகுதிகளில் அரிவாள் வெட்டு விழுந்தது. அக்கம் பக்கத்தினர் சத்தம் போட்டதால் கொலைவெறி தாக்குதல் நடத்திய கும்பல், கர்நாடகா பதிவு எண் கொண்ட காரில் காரில் தப்பிச் சென்றது.
இதனை அடுத்து, படுகாயம் அடைந்த பெருமாளை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
இது குறித்து ஏரியூர் போலீசார், கொலைவெறி தாக்குதல் நடத்திய 5 பேரை பாலக்கோடு பகுதியில் கைது செய்தனர். மேலும் சிலர் தப்பி ஓடிவிட்டனர்.
தொடர்ந்து தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று பெங்களூருவில் சூரியபிரகாஷை கைது செய்தனர்.
மேலும் இதே வழக்கில் ஏற்கனவே கைது செய்து சிறையில் இருந்து வரும் தெரா (எ) டெண்டுல்கர் (25) என்பவர் மீது இன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைத்து உள்ளனர்.
இந்த கொலை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்ட கூலிப்படையைச் சேர்ந்த நபர்கள் இதுவரை 4 பேர் மீது குண்டச்சட்டம் பாய்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.