Police Recruitment

மதுரையில் பெற்றோர் மது குடித்து துன்புறுத்தியதால் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த சிறுமி

மதுரையில் பெற்றோர் மது குடித்து துன்புறுத்தியதால் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த சிறுமி

‘மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு’ என்ற விழிப்புணர்வு வாசகம் பல்வேறு இடங்களில் எழுதப்பட்டிருப்பதை காணலாம். அதனை பார்த்துக் கொண்டே நாள்தோறும் ஏராளமான கடந்து செல்கின்றனர். மதுவினால் நாடும்… வீடும்… எவ்வாறு பாதிக்கப்படுகிறது? என்பதை யோசிப்பதற்கு யாருக்கும் நேரம் இல்லாமல் ஓடுகிறோம்.

இன்றைய நவீன காலத்தில் மது குடிப்பது பகட்டான விஷயமாகவே கருதப்படுகிறது. அதிலும் இன்று இருபாலரும் ஒன்றாக சேர்ந்து மது குடிக்கின்றனர். ஆண்களுக்கு நிகராக பெரிய பெரிய நகரங்களில் பெண்களும் மது கடைகளில் நிற்பதை காண முடிகிறது. மதுப்பழக்கத்தால் நாளடைவில் உடல் தளர்ந்து, மன அழுத்தம் ஏற்பட்டு வாழ்க்கையை வீணடிக்கும் நிலை ஏற்படுகிறது. மது குடிக்கும் நபர் மட்டும் இதில் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் அவரை சார்ந்த நபர்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

மதுவினால் ஒரு சிறுமி பாதிக்கப்பட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். அதன் விபரம் வருமாறு:-

மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்த 9 வயதுடைய மாணவி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வரும் அந்த மாணவி இயல்பாக இருக்க முடியாமல் கடந்த சில மாதங்களாக ஒரு விதமன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்கு காரணம் அவரது பெற்றோர்கள் தான்.

சிறுமியின் தந்தை கூலி தொழிலாளி. வேலை முடித்து வரும் அவர் தினமும் போதையிலையோ அல்லது மது பாட்டிலோடு தான் வீட்டுக்கு வருவது வழக்கம். மகள் முன்பு மது குடித்த அந்த ஆசாமி நாளடைவில் மனைவிக்கும் மது பழக்கத்தை கற்றுக் கொடுத்ததாக தெரிகிறது. அவரும் மது குடிக்க பழகிக் கொண்டார். நாட்கள் செல்ல செல்ல இருவரும் வீட்டுக்குள்ளேயே ஒன்றாக சேர்ந்து மது குடித்தனர். மகளின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று அவர்கள் சிறிதும் கூட யோசிக்கவில்லை.

மது குடித்துவிட்டு போதை ஏறிய பின்பு கணவன், மனைவி தங்கள் 9 வயது குழந்தையை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் பல நேரங்களில் இரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே துரத்தி விட்டுள்ளனர். இதனால் அந்த சிறுமி பக்கத்து வீட்டிலோ அல்லது தெருவிலோ தூங்கும் நிலை ஏற்பட்டது. சம்பவத்தன்று இரவும் போதையில் பெற்றோர் தங்களது மகளை வீட்டை விட்டு வெளியே துரத்தியுள்ளனர்.

பெற்றோரின் பொறுப்பு கெட்ட இந்த செயலால் செய்வதறியாது திகைத்த அந்த சிறுமி இறுதியாக அவனியாபுரம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்து தனக்கு நேர்ந்த கொடுமையை கூறியுள்ளார்.

சிறுமியின் நிலையைப் பார்த்து போலீசாரும் பரிதாபப்பட்டனர். இந்த நிலையில் இந்த தகவல் மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதாவுக்கு தெரியவந்தது. அவர் உடனே குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவுக்கு தகவல் தெரிவித்து சம்பந்தப்பட்ட சிறுமிக்கு வேண்டியவற்றை செய்யுமாறு உத்தரவிட்டார். அதன்படி குழந்தைகள் பாதுகாப்பு குழு நிர்வாகிகள் சோபனா, டயானா ஆகியோர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த அந்த சிறுமியை மீட்டனர். பெற்றோரின் மதுப்பழக்கத்தால் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் கலெக்டர் சங்கீதா போன் மூலம் பேசி ஆறுதல் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.