பெண் மர்மசாவு வழக்கில் திருப்பம்: நடத்தை சந்தேகத்தால் மனைவியை கழுத்தை நெரித்துக்கொன்றேன்- கைதான கணவர் வாக்குமூலம்
பிலோமினாளை அவரது கணவரை கொலை செய்து விட்டு நாடகமாடியது தெரிய வந்தது.
போலீசார் தீவிர விசாரணை நடத்தி என்னை பிடித்துவிட்டனர்.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள மேட்டூர் போஸ்ட் ஆபிஸ் தெருவை சேர்ந்தவர் ரூபன் (வயது 47). இவரது மனைவி பிலோமினாள் (39). இவர்கள் செங்கல் சூளை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்.
நேற்று முன்தினம் காலையில் பிலோமினாள் படுக்கை அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த கடையம் போலீசார் விரைந்து வந்து, பிலோமினாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள்.
அப்போது ரூபன் தனக்கு ஒன்றும் தெரியாதது போல இருந்தார். பிலோமினாளின் கழுத்தில் காயங்கள் இருந்தது. இதைக்கண்ட அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இவர்கள் இதுபற்றி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் ரூபனிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினர். இதில் பிலோமினாளை அவரது கணவரை கொலை செய்து விட்டு நாடகமாடியது தெரிய வந்தது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-
எனது மனைவி பிலோமினாளின் நடத்தையில் எனக்கு சந்தேகம் இருந்தது. இதனால் நான் எனது மனைவியை கண்டித்தேன். இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்றும் எங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நான் எனது மனைவியை கொலை செய்ய முடிவு செய்தேன்.
அதன்படி நேற்று முன்தினம் எனது 2 குழந்தைகளையும் ஆழ்வான் துலுக்கப்பட்டியில் உள்ள பாட்டி வீட்டிற்கு அனுப்பி விட்டேன். நானும், எனது மனைவியும் மட்டும் வீட்டில் தனியாக இருந்தோம். இரவில் வீட்டில் பிலோமினாள் தூங்கிக் கொண்டு இருந்தார். அப்போது அவரது கழுத்தை நெரித்தேன். உடனே அவர் தப்பிக்க முயற்சித்தார். ஆனாலும் விடாமல், அருகில் கிடந்த தலையணையால் முகத்தை அமுக்கி கொடூரமாக கொன்றேன். அதன்பின்னர் எதுவும் நடக்காதது போல் பிலோமினாள் மர்மமான முறையில் இறந்து விட்டார் என்று போலீசுக்கு தகவல் தெரிவித்தேன். எனினும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி என்னை பிடித்துவிட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.