Police Recruitment

கடலூர் மாவட்டத்தில் ஏ.டி.எம். எந்திரம் உடைத்த சம்பவம்- வாலிபரிடம் போலீஸ் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

கடலூர் மாவட்டத்தில் ஏ.டி.எம். எந்திரம் உடைத்த சம்பவம்- வாலிபரிடம் போலீஸ் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

கடலூர் மஞ்சகுப்பம் பாரதி சாலை காதி கிராப்ட் அருகே தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் செயல்பட்டு வருகின்றது.

நேற்று நள்ளிரவு ஏ.டி.எம். மையத்தில் வாலிபர் ஒருவர் கூச்சலிட்டுக் கொண்டு ஏ.டி.எம்.எந்திரத்தை தாக்கி சேதப்படுத்தி கொண்டிருந்தார். அப்போது வாகன ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போலீசார் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து வாலிபர் ஒருவர் கொள்ளை அடிக்க முயற்சி செய்கிறாரா? என கருதி உடனடியாக ஏ.டி.எம். மையத்திற்குள் சென்று அந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த வாலிபர் மதுபோதையில் இருந்து வந்தது தெரியவந்தது. பின்னர் அவரிடம் விசாரணை செய்ததில், கடலூரை சேர்ந்த மணிகண்டன் (வயது 26 ) என்பது தெரியவந்தது.

இவருக்கும் இவரது மனைவிக்கும் குடும்ப பிரச்சினை ஏற்பட்ட காரணத்தினால் இது தொடர்பாக நேற்று கடலூர் அனைத்து போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த போலீசார் சரியான முறையில் இவரது புகாரை கேட்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் மணிகண்டனுக்கு கடும் மன உளைச்சல் ஏற்பட்டதால் அதிகளவில் மது அருந்தியதாக தெரிகிறது. மேலும் குடிபோதையில் மணிகண்டன் சம்பவ இடத்தில் இருந்த ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க சென்றபோது பணம் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் ஏ.டி.எம். எந்திரத்தை சேதப்படுத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் மணிகண்டன் அதிக மதுபோதையில் இருந்து வந்த காரணத்தினால் போலீசார் அவரது வீட்டிற்கு நேரில் சென்று பாதுகாப்பாக இறக்கி விட்டனர். பின்னர் அங்கிருந்தவர்களிடம் நடந்த சம்பவத்தை கூறினர். இன்று காலை மணிகண்டனுக்கு மதுபோதை தெளிந்த பிறகு கடலூர் புதுநகர் போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வங்கி அதிகாரிகளும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலூரில் அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியான இம்பீரியல் சாலையில் மது போதையில் வாலிபர் தனது குடும்ப பிரச்சினையை போலீசார் விசாரிக்காததால் மன உளைச்சல் ஏற்பட்டு அதிகளவில் மது குடித்து ஏ.டி.எம் எந்திரத்தை சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.