சின்னமனூரில் வாலிபரை குத்திக் கொன்ற 6 பேர் கைது
தேனி மாவட்டம் சின்னமனூர் அழகர்சாமி நகரைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் வினோத்குமார் (வயது 24). இவர் தனது தந்தையுடன் சேர்ந்து மாம்பழ வியாபாரம் செய்து வந்தார். வினோத்குமாரின் நண்பரான யுவராஜாவின் செல்போனை அதே பகுதியைச் சேர்ந்த சங்கிலி மகன் ஒண்டி என்ற ஒல்லிக்குச்சி என்பவர் பறித்து சென்று விட்டார்.
யுவராஜூடன் சென்று சின்னமனூர் வாரச்சந்தை அருகே மதுபோதையில் இருந்த ஒண்டியிடம் தனது நண்பரின் செல்போனை தருமாறு கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த ஒண்டி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வினோத்குமாரை சரமாரியாக குத்தினார். இதனை தடுக்க வந்த யுவராஜாவை ஒண்டியின் நண்பர்கள் தடுத்துள்ளனர்.
பலத்த காயமடைந்த வினோத்குமாரை தனது மோட்டார் சைக்கிளில் யுவராஜா சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரி யில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி வினோத்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சுப்பிரமணி சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மாயன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக ஒண்டி என்ற ஒல்லிக்குச்சி (வயது25), கார்த்தி (24), அஜய் (23), செல்வேந்திரன் (24), மாதவன் (24), செல்வா (24) ஆகிய 6 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.