தேனி அருகே நாக்கு, மூளை, கல்லீரலை பார்சலில் கடத்திய கும்பல்- நரபலி கொடுக்கப்பட்டதா? என விசாரணை
தேனி மாவட்டம் உத்தமபாளையம் பழைய பைாபஸ் சாலையில் உதவி போலீஸ் சூப்பிரண்டு மதுக்குமாரி தலைமையில் போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
நள்ளிரவு 12.30 மணி அளவில் மின்னல் வேகத்தில் வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் இருந்த 4 பேரும் சந்தேகப்படும்படி இருந்ததால் அவர்களை காரை விட்டு கீழே இறங்க வைத்து விசாரித்தனர்.
அதில் அவர்கள் 3 பேர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும், ஒருவர் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. அவர்கள் வைத்திருந்த பையை பிரித்து சோதனையிட்டனர். அதில் நாக்கு, மூளை, கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்பு பாகங்கள் தனித்தனியாக பிளாஸ்டிக் கவரில் பார்சலாக சுற்றி வைக்கப்பட்டிருந்தது. இதை பார்த்ததும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த உடல் உறுப்புகள் மனிதருடையதா அல்லது விலங்குகள் உடையதா என தெரிய வில்லை. இது குறித்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி நிர்வாகத்திற்கும், வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உடல் உறுப்பு பாகங்கள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.
பிடிபட்ட தேனி நபர் ஏற்கனவே நரபலி வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டவர். இவர் மீது மாந்தரீக வேலையில் ஈடுபட்டு மோசடி செய்ததாகவும், வழக்குகள் பதிவாகி உள்ளது. எனவே யாரையேனும் நரபலி கொடுத்து அவர்களது உடல் உறுப்புகளை விற்பனைக்காக கொண்டு சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. பிடிபட்ட சிவகங்கை மாவட்ட கார் யாருடையது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அவர்கள் மீது ஏதேனும் குற்ற வழக்குகள் உள்ளதா? என சிவகங்கை மாவட்ட போலீசாரிடம் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.