மருத்துவர்கள், நடுத்தர சம்பளம் வாங்குவோரை குறிவைத்து நூதன முறையில் ‘தற்கொலை’ மோசடி மூலம் பணம் பறிப்பு: சைபர் கிரைம் போலீஸார் அறிவுரை
மருத்துவர்கள் மற்றும் நடுத்தர சம்பளம் வாங்குவோரைக் குறி வைத்து, நூதன முறையில் `தற்கொலை’ மோசடி மூலம் கும்பல் ஒன்று பணம் பறிக்க முயன்று வருவதாக சைபர் கிரைம் போலீஸார் எச்சரித்துள்ளனர்.
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினந்தோறும் புது வகையான மோசடிகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக பல தரப்பிலிருந்தும் மக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டாலும் மோசடிக்காரர்கள் தினந்தோறும் புதுவிதமான யுக்திகளைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுகின்றனர்.
அதன்படி, தற்போது மருத்துவர்கள் மற்றும் நடுத்தர குடும்பத்தினரைக் குறிவைத்து `தற்கொலை’ மோசடி என்னும் நூதன மோசடி நடைபெறத் தொடங்கி உள்ளது. இதுகுறித்து சென்னை சைபர் கிரைம் பிரிவு போலீஸார் கூறியதாவது:
வீடியோவில் அழைப்பு: நேர்காணல் அல்லது ஆலோசனை எனும் பெயரில் இளம் பெண் ஒருவர் வீடியோ காலில் அழைத்துப் பேசுவார். அவரும், அவரது பேச்சும் ரசிக்கும் வகையில் இருக்கும். நேர்காணல் முடிந்தவுடன் புன்னகையுடன் விடைபெறுவார். சில மணி நேரங்களில் அழைப்பை மேற்கொண்ட அந்தப் பெண் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறி, நேர்காணலில் பங்கேற்றவருக்கு போனில் அழைப்பு வரும்.
பேசுபவர் தன்னை போலீஸ் என அறிமுகப்படுத்திக் கொள்வார். ஆனால், அவர் உண்மையான போலீஸ் கிடையாது. போலீஸ் பெயரில் மோசடி கும்பல் பேசும். உங்களிடம் பேசிய சில மணி நேரங்களில்தான் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் இறப்பதற்கு முன் தற்கொலை கடிதம் ஒன்றையும் எழுதி உள்ளார். அதில், தற்கொலைக்கு நீங்கள்தான் காரணம் என அதில் குறிப்பிட்டுள்ளார்’ என்று கூறியதோடு அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான மருத்துவச் சான்றிதழ்களையும் வாட்ஸ்-அப் எண்ணில் அனுப்பி வைப்பார்கள். நேரில் ஆஜராக சம்மன்: பின்னர், மேலும் ஒருவர் போலீஸ் எனக் கூறிக்கொண்டு,விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும்’ என சம்மன் அனுப்புவார். நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து தப்பிக்க காவலர் கேட்கும் தொகையைக் கொடுக்கும் நிலைக்கு அந்த நபர் தள்ளப்படுவார். இப்படி கொல்கத்தாவில் 2 மருத்துவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். தமிழகத்திலும் இந்த கும்பல் வலை விரிக்கத் தொடங்கியுள்ளது.
எனவே, இந்த விஷயத்தில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். மோசடி கும்பல் யாரையாவது குறி வைத்தால் அவர்கள் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் மிரட்டலுக்குப் பயந்து யாரும் பணம் அனுப்ப வேண்டாம்.
இவ்வாறு சைபர் கிரைம் போலீ ஸார் தெரிவித்தனர்.