Police Department News

நெல்லையில் பேரிடர் கால விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி..!

நெல்லையில் பேரிடர் கால விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி..!

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் பாளையங்கோட்டை சாராள் தக்கர் மகளிர் கல்லூரியில் வடகிழக்கு பருவமழை மற்றும் பேரிடர் காலங்களில் ஏற்படும் பிரச்சனைகளை எதிர்கொள்வது குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமை வகித்து அங்கு வைக்கப்பட்டிருந்த பேரிடர் காலமீட்பு பணிக்கான சிறப்பு உபகரணங்கள் அடங்கிய கண்காட்சியை தொடங்கி வைத்தார். தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் ராஜா மீட்பு பணிகளில் எவ்வாறு ஈடுபடுவது என்பது குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சியை தீயணைப்பு வீரர்கள் மூலம் நடத்தினர்.
இந்த ஒத்திகையின்போது வீட்டில் சமையல் கேஸ் சிலிண்டர் மூலம் தீ விபத்து ஏற்பட்டால் அவற்றை சாக்குப்பை வாலி மற்றும் கையால் எவ்வாறு தடுக்கவேண்டும். மழை வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் நீர் நிலைகளில் சிக்கியவர்களை வீட்டில் உள்ள வாட்டர் கேன்கள் குடம் போன்ற பொருட்கள் மூலம் எவ்வாறு படகு தயார் செய்வது என்றும் அவற்றை பயன்படுத்தி எவ்வாறு மீட்பது என்பது குறித்து கல்லூரி மாணவிகள் முன்னிலையில் செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும் பேரிடர் காலங்களில் விபத்துகளில் சிக்கி காயம் அடைந்தவர்களை தனி நபராக அல்லது மற்றவர்களோடு இணைந்து எப்படி மீட்பது என்று மாணவிகளுக்கு செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. விலங்குகளை மீட்பதற்கான கயிறு உள்ளிட்ட உபகரணங்கள், நீருக்குள் இருக்கும் பொருட்களை கண்டறியும் நவீன கேமரா, புகை மண்டலங்களில் பொருட்களை கண்டறியும் கேமரா ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டன. மேலும் பூட்டப்பட்ட கதவை திறக்க பயன்படும் கருவி, செயற்கையாக சுவாசம் கொடுக்கும் கருவி, பலவகை மோட்டார் கருவிகள் மற்றும் நீர்நிலைகள் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதற்கான நவீன கருவி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட உபகரணங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இவற்றை கல்லூரி மாணவிகள் ஆர்வமுடன் பார்த்து அதற்கான விளக்கங்களை தீயணைப்பு வீரர்களிடம் கேட்டறிந்தனர்.

Leave a Reply

Your email address will not be published.