Police Recruitment

கஞ்சா, போதை மாத்திரைகளுடன் சிக்கிய வாலிபர்கள்: அரசு ஆஸ்பத்திரி ஊழியர்களே உடந்தையாக இருந்தது அம்பலம்

கஞ்சா, போதை மாத்திரைகளுடன் சிக்கிய வாலிபர்கள்: அரசு ஆஸ்பத்திரி ஊழியர்களே உடந்தையாக இருந்தது அம்பலம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் உத்தரவின் பேரில் தனிப்பிரிவு போலீசார் உசிலம்பட்டி நகர் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
பங்களாமேடு பகுதியில் அவர்கள் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள்களில் வந்த வாலிபர்களை தடுத்து நிறுத்தினர். அவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகமடைந்த போலீசார் மோட்டார் சைக்கிள்களை சோதனை செய்தபோது 2 கிலோ கஞ்சா கஞ்சா, 48 போதை மாத்திரைகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. போலீசார் விசாரணையில் அவர்கள் அளித்த பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உசிலம்பட்டி அரசு மருத்துவமனை தற்காலிக பணியாளர் ஜெயராமன், செல்லம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர் கண்ணன் ஆகியோர் உதவியுடன் போதை மாத்திரைகளை வாங்கி வந்து உசிலம்பட்டி பகுதியில் விற்பனை செய்து வருவதாகவும், மேலும் சிலருடன் இணைந்து கஞ்சா விற்று வருவதாகவும் அவர்கள் கூறினர். மேலும் விசாரணையில் அவர்கள் உசிலம்பட்டி கருப்புக்கோவில் தெருவைச் சேர்ந்த பிரகாஷ், வி.பெருமாள்பட்டியைச் சேர்ந்த சரவணன், குளத்துப்பட்டியைச் சேர்ந்த ஜெயராமன், கவுண்டன் பட்டியைச் சேர்ந்த பாண்டியன் என்பதும் தெரியவந்தது.
போலீஸ் நிலையத்தின் அருகில் உள்ள பங்களாமேடு பகுதியில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை நடந்து வந்ததும், அரசு ஆஸ்பத்திரி ஊழியர்களே இதற்கு உடந்தையாக இருந்ததும் தனிப்பிரிவு போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவர்கள் 5 பேரையும் கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து இதுகுறித்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் போதை பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க தீவிரமாக செயலாற்ற வேண்டும் என முதல்-அமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் போதைப்பொருள் தடுப்பு பணிகளில் அதிகாரிகளும், போலீசாரும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் போதை மாத்திரைகள் விற்பனை அரசு ஊழியர்களின் உதவியுடன் நடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. எனவே அதிகாரிகளும், போலீசாரும் அரசு ஆஸ்பத்திரிகளிலும் மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவது குறித்து கண்காணிக்க வேண்டும் என்றும் பள்ளி, கல்லூரி பகுதிகளில் ரோந்து பணியை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போலீஸ் நிலையம் அருகிலேயே தைரியமாக கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படும் அவலத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் வகையில் செயல்படும் சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.