ஆளுநர்களின் செயல்பாட்டுக்கு தலைமை நீதிபதி அதிருப்தி
ஆளுநர்களின் செயல்பாட்டுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் திங்கள்கிழமை அதிருப்தி தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாக்களுக்கு அம்மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளிக்கவில்லை எனவும் பேரவையை கூட்டுவதற்கு முட்டுக்கட்டையாக இருப்பதாகவும் குற்றம்சாட்டி உச்சநீதிமன்றத்தில் பஞ்சாப் அரசு தொடர்ந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறியது:
“மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க உத்தரவிடக் கோரி மாநில அரசு நீதிமன்றங்க்ளை நாட வேண்டுமா?. உச்சநீதிமன்றத்துக்கு வழக்கு வருவதற்கு முன்னதாகவே ஆளுநர்கள் செயலாற்றி இருக்க வேண்டும். நீதிமன்றம் வந்த பிறகு செயலாற்றுவதை தவிர்க்க வேண்டும்.
ஆளுநர்கள் அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு ஆளுநர்கள் முடிவெடுக்க வேண்டும். தமிழகம், கேரளம் அரசுகளும் ஆளுநர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர்.
பஞ்சாப் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நிதி மசோதா உள்பட 7 மசோதா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆளுநர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.” எனத் தெரிவித்தார்.
மேலும், பஞ்சாப் அரசு தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.