இந்த “வாகனங்களை” இனி இயக்கவே முடியாதா.. டிரைவிங் லைசென்ஸில் மாற்றம்? சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு
இலகு ரக மோட்டார் வாகனம் இயக்குவதற்கான, டிரைவிங் லைசென்ஸ் குறித்த வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் நடந்துள்ள நிலையில், அதுகுறித்த முக்கிய உத்தரவு தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஒரு நபர், வாகனம் ஓட்ட விரும்பினால், முதலில் கற்றல் நோக்கத்திற்காக அவருக்கு கற்றல் உரிமம் தரப்படும்.. இது வெறும் 6 மாத காலமே உள்ள தற்காலிக உரிமமாகும்.. அதற்கு பிறகுதான், நிரந்தர உரிமம் தரப்படுகிறது. அந்தவகையில், பல்வேறு வகையான பயன்பாடுகளுக்கு ஏற்ப, மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ், டிரைவிங் லைசென்ஸ் வழங்கப்படுகிறது.
வாகனங்கள்: ஆனால், 2017ல் சுப்ரீம்கோர்ட் அளித்த தீர்ப்பில், 7,500 கிலோ வரை எடையுள்ள பயணியர் வாகனங்கள், இலகுரக மோட்டார் வாகனம் என்பதற்கான வரையறையில் இருந்து நீக்கப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது
இதையடுத்து, விபத்துகளில் காப்பீடு வழங்குவது உள்ளிட்டவற்றில் குழப்பம் உள்ளதாக, 76 வழக்குகள் சுப்ரீம்கோர்ட்டில் அடுத்தடுத்து தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவைகளை 3 நீதிபதிகள் அமர்வு, 5 நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு சட்ட அமர்வுக்கு பரிந்துரைத்தது.
உத்தரவுகள்: அதன்படி, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான சட்ட அமர்வு, இந்த வழக்கை விசாரித்து வருகிறது.. 2 மாதங்களுக்கு முன்புகூட, இது தொடர்பான விசாரணை சுப்ரீம்கோர்ட்டில் நடந்தது.. அப்போது நீதிமன்றம் சில உத்தரவுகளை கூறியிருந்தது.
குறிப்பாக, “இலகு ரக மோட்டார் வாகனம் இயக்குவதற்கான லைசென்ஸ் பெற்றவர்கள், குறிப்பிட்ட எடையுள்ள இலகு ரக மோட்டார் வாகன பிரிவில் உள்ள வர்த்தக பயன்பாட்டு வாகனத்தை ஓட்டலாமா என்பது ஒரு கொள்கை முடிவாகவே இருக்க முடியும். இதற்காக சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டுமா என்பது குறித்து மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
அதிரடி விசாரணை: மக்களின் பாதுகாப்பு, காப்பீட்டு விவகாரம் உள்ளிட்டவற்றை கருத்தில் வைத்து, தன் பதில் மனுவை மத்திய அரசு இரண்டு மாதங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இந்த விவகாரம் அரசியலமைப்பு சட்டம் தொடர்பானது கிடையாது என்றாலும், மத்திய அரசு அளிக்கும் பதிலின் அடிப்படையில், வழக்கின் அடுத்த கட்ட விசாரணை நடக்கும்” என்று உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மறுபடியும் விசாரணைக்கு வந்தது.. அப்போது இதுகுறித்து அமர்வு தெரிவித்ததாவது: “இது கொஞ்சம் சிக்கலான விவகாரம் தான். இந்த குழப்பத்துக்கு தீர்வு காணும் வகையில், மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டுமா என்பதை மத்திய அரசு ஆய்வு செய்ய வேண்டும்.
ஒத்துழைப்பு: மாநில அரசுகளின் கருத்துக்களையும் கேட்டறிய வேண்டும். அதனால், இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு, அனைத்து மாநிலங்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சட்டத்தில் திருத்தம் செய்ய தேவையா என்பது குறித்து, வரும் ஆண்டு ஜனவரி 17ம் தேதிக்குள் தன் அறிக்கையை மத்திய அரசு விரிவாக தாக்கல் செய்ய வேண்டும்” என்று அமர்வு உத்தரவிட்டுள்ளது.