சரியான நேரத்தில் ஹெலிகாப்டர் வந்து எனது கர்ப்பிணி மகளை பத்திரமாக மீட்டது: தாய் பேட்டி
தென் மாவட்டங்களான தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்தது. இதில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையால் ரெயில் பாதைகளில் மண் அரிப்பு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்தப்பட்டது.
ரெயிலில் இருந்த பயணிகள் பஸ், வேன்கள் மூலம் சுமார் 300 பேர் மீட்கப்பட்டனர். மீதமிருந்த 500 பயணிகளை மீட்கும் பணியில் ஹெலிகாப்டர் ஈடுபடுத்தப்பட்டது. முதற்கட்டமாக ஹெலிகாப்டர் மூலம் ரெயிலில் சிக்கிய பயணிகளுக்கு உணவுகள் வழங்கப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணி பெண் உள்பட நான்கு பேரை சூலூரில் இருந்து வந்த ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு மதுரை விமான நிலையம் கொண்டு வரப்பட்டனர்.
ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் அனுசுயா மயில், கணவர் பெருமாள், தாய் சேது லட்சுமி, குழந்தை தாஸ் வருண் ஆகிய நான்கு பேரும் பத்திரமாக மீட்கப்பட்டு ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மதுரை விமான நிலையம் கொண்டு வரப்பட்டனர்.
மதுரை விமான நிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர். அங்கு கர்ப்பிணி உள்பட 4 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் கர்ப்பிணி பெண் உள்ளிட்டோர் நலமுடன் இருப்பதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீவைகுண்டத்தில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து மீட்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் தாயார் சேது லட்சுமி கூறியதாவது:-
எங்கள் ஊருக்கு அருகில் உள்ள ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையும் முழுமையாக தண்ணீரில் மூழ்கியது. மின்சாரம் இல்லாத நிலையில் யாரையும் செல்போன் மூலமாக கூட தொடர்பு கொள்ள முடியாமல் தவித்தோம்.
3 நாட்களாக உணவு, தண்ணீர் இன்றி தவித்தோம். நாங்கள் இருக்கும் பகுதிக்கு உணவு வழங்குவதற்காக ஹெலிகாப்டர் வந்தபோது உதவி என்று பெரிய அட்டையில் எழுதி காண்பித்ததால் உடனடியாக ராணுவ வீரர்கள் எங்களை மீட்டனர்.
எங்களை நெல்லை அரசு மருத்துவமனைக்கு தான் அழைத்து செல்வார்கள் என்று நினைத்தபோது அங்கு போதிய வசதி தற்போது இல்லை எனக்கூறி மதுரைக்கு அழைத்து வந்தனர். முதன் முறையாக ஹெலிகாப்டரில் வந்தபோது பதட்டமாக இருந்தது.
எங்களுக்கு உணவு கூட வேண்டாம், கர்ப்பிணிப் பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றால் போதும் என நினைத்து காத்திருந்தோம். எங்கள் நல்ல நேரத்திற்கு ஹெலிகாப்டர் நாங்கள் இருக்கும் பகுதிக்கு வந்தது.
மதுரை அரசு மருத்துவமனையில் எனது மகள் தற்போது நலமாக இருக்கிறார் என்று கண்ணீருடன் கூறினார்.