விமானத்தில் சென்று கஞ்சா பிஸினஸ்… ‘காஸ்ட்லி’ போதை வியாபாரிகள் சிக்கியது எப்படி?
சென்னையில் இருந்து திரிபுராவுக்கு விமானத்தில் சென்று கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்த இருவர் போலீசில் சிக்கியுள்ளனர்.
சென்னை தரமணி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவது குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனை தொடர்ந்து தரமணி உதவி ஆணையாளர் அமீர் அஹமது தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் சென்னை தரமணி ரயில் நிலையம் அருகில், பெருங்குடி, கல்லுக்குட்டை உள்ளிட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவரை போலீசார் பிடித்தனர். விசாரணையில் அவர்கள் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த ஷபிக் மியா, இமான் உசைன் என்பது தெரிந்தது. இருவரும் சென்னையை அடுத்த பெரும்பாக்கம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகின்றனர். கஞ்சா விற்பனை தொடர்பாக அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல புதிய தகவல்களை போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
திரிபுரா மாநிலத்தை சேர்ந்த இருவரும் சென்னையில் இருந்து திரிபுரா மாநிலத்திற்கு விமானத்தில் டிராலி சூட்கேஸ்களுடன் செல்கின்றனர். சூட்கேஸ் டிராலிகளில் விமான நிலைய ஸ்டிக்கர் ஒட்டி அனுப்புவது வழக்கம். திரிபுராவில் குறைந்து விலைக்கு கஞ்சாவை வாங்கி அவற்றை டிராலிகளில் வைத்து ரயிலில் சென்னைக்கு கொண்டு வந்து விற்பனை செய்துள்ளனர். டிராலியில் விமான நிலைய ஸ்டிக்கர் இருப்பதாலும், அதிகாலை நேர ரயிலில் சென்னைக்கு வருவதாலும் போலீசாரின் சோதனையில் இருந்து தப்பி விடுவோம் என்றும் போலீசில் தெரிவித்துள்ளனர்.