Police Department News

ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய இணை சார் பதிவாளர் கைது: தரகரும் சிக்கினார்

ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய இணை சார் பதிவாளர் கைது: தரகரும் சிக்கினார்

சென்னை ஆவடி அடுத்த வீராபுரம் பகுதியை சேர்ந்தவர் கோட்டீஸ்வரன் (55).

இவர், மோரை பகுதியில் 2,400 சதுர அடியில் புதிதாக நிலம் வாங்கி, கடந்த 19ம் தேதி ஆவடி சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்துள்ளார்.

இந்த நிலத்திற்கான பத்திரம் பெறுவதற்கு இணை பத்திர பதிவாளரான செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த அமுல்ராஜ் (35) என்பவரை அணுகியபோது, அவர் ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார்.

மேலும், அந்த லஞ்ச பணத்தை சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த தென்னரசு (28) என்ற தரகரிடம் வழங்கும்படி அமுல்ராஜ் கூறியுள்ளார்.

ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத கோட்டீஸ்வரன், இதுகுறித்து திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் தெரிவித்தார்.

இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு துறையினர் அறிவுறுத்தலின் பேரில், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை நேற்று கோட்டீஸ்வரன், தரகர் தென்னரசுவிடம் கொடுத்தார்.

அப்போது அங்கு மாறுவேடத்தில் இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் ராமசந்திர மூர்த்தி மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் தமிழரசி தலைமையிலான அதிகாரிகள் தென்னரசுவை கையும் களவுமாக பிடித்தனர்.

அவரிடம் விசாரணை நடத்தியதில் இணை சார் பதிவாளர் அமுல்ராஜ் அறிவுறுத்தலின்படி தான் லஞ்சம் பெற்றதாக ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இணை சார் பதிவாளர் அமுல்ராஜ் மற்றும் தரகர் தென்னரசு ஆகிய இருவரையும் கைது செய்து, திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.