பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைதான வாலிபரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரணை
மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு சில அமைப்புகளை தடை செய்தது. அப்போது கோவையில் 6 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்தது. மேலும் 2 கடைகளில் டயர் எரிப்பு சம்பவம், 2 அரசு பஸ்கள் மீது கல் வீச்சு உள்ளிட்ட 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில் 9 வழக்குகளில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்குகள் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அப்போது கோவைப்புதூர் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் ஆனந்த கல்யான கிருஷ்ணன் (வயது 67). ஆர்.எஸ்.எஸ். பிரமுகர். இவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய குற்றவாளியை மட்டும் கண்டு பிடிக்க முடியாமல் இருந்தது. குனியமுத்தூர் போலீசார் விசாரணை நடத்தி ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய குனியமுத்தூர் செல்வம் நகரை சேர்ந்த முகமது சபி (29) என்பவரை கடந்த 7-ந் தேதி கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர். இந்தநிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் முகமது சபியை காவலில் எடுத்து விசாரிக்க தலைமை குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி இன்று ஒரு நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார். இதனையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் முகமது சபியை விசாரணைக்கு அழைத்து சென்றனர். அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்