இரு சக்கர வாகனத்தில் சென்றபோது தவறவிட்ட 15-சவரன் தங்க நகைகளை காவல் நிலையில் ஒப்படைத்த தொழுநோய் மருத்துவமனை ஊழியர்கள்
செங்கல்பட்டு அடுத்த திருமணி எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன் (38). இவரது தம்பி கோபிநாத்தின் திருமணம் நேற்று நடைபெற்றது. அப்போது திருமணத்திற்காக போடப்பட்ட 15 சவரன் தங்க நகைகளுடன் மாமியார் ஷீபாவை ரயில் ஏற்றுவதற்காக செங்கல்பட்டு ரயில் நிலையம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது புதிய பேருந்து நிலையம் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக ஜனார்த்தனனின் இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த நகைப்பை கீழே விழுந்துள்ளது.
இதனிடையே, செங்கல்பட்டு தொழுநோய் ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிந்து வரும் கள ஆய்வாளர் ரமேஷ் என்பவர் தனது பணி நிறைவு பாராட்டு விழாவிற்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது ஓட்டுநர் ஜெகன், நித்தியானந்தன், கணேஷ், நாராயணன், ஸ்ரீதர், அபராஜிதன், கோவிந்தராஜ் ஆகியோருடன் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது புதிய பேருந்து நிலையம் அருகே வந்த போது பை கிடப்பதை கண்டு அதை எடுத்து பார்த்துள்ளனர். அதில் ஏராளமான தங்க நகைகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து பை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்து செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்க ஜனார்த்தனன் மற்றும் அவரது மாமியார் ஷீபா ஆகியோர் வந்தனர். அப்போது காணாமல் போன நகையை தொழுநோய் மருத்துவமனை ஊழியர்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்ததை காவலர்கள் கூறினர். இதனால் நிம்மதி பெருமூச்சு விட்ட இருவரும் நகையை ஒப்படைத்த ரமேஷ் மற்றும் ஜெகன் ஆகிய இருவருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக் கொண்டனர். தொடர்ந்து செங்கல்பட்டு காவல் துணை கண்காணிப்பாளர் புகழேந்தி கணேசன் மற்றும் நகர காவல் ஆய்வாளர் ஹரிஹரன் முன்னிலையில் தங்க நகைகள் ஒப்படைக்கப்பட்டது. மேலும் நேர்மையான முறையில் நகைகளை ஒப்படைத்த தொழுநோய் மருத்துவமனை ஊழியர்களுக்கு காவல் துணை கண்காணிப்பாளர் புகழேந்தி கணேசன் சாவை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.