சென்னையில் காரில் மயங்கி கிடந்த நபரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்த 6 காவலர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கிய சென்னை பெருநகர காவல் ஆணையாளர்
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், காரில் மயங்கிய நிலையில் கிடந்த நபரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்த துரைப்பாக்கம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் உட்பட 6 காவல் ஆளிநர்களை நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்
J-9 துரைப்பாக்கம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.V.ரவிச்சந்திரன் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு.R.கண்ணன், தலைமைக்காவலர் திரு.C.குணசேகரன், முதல் நிலைக்காவலர்கள் திரு.K.கதிரேசன், திரு.S.அன்சார், திரு.K.பொம்படியன் ஆகியோர் கடந்த 02.04.2024 அன்று மாலை துரைப்பாக்கம், OMR, ரேடியல் ரோடு சந்திப்பு அருகே கண்காணிப்பு பணியிலிருந்த போது, அங்கு சாலையில் காரை ஓட்டி வந்த துரைப்பாக்கத்தை சேர்ந்த ரவீந்தர்சிங், வ/45 என்பவர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு காரை ஓட்டா முடியாமல், நடுரோட்டில் நிறுத்தி விட்டு மயங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனை கண்ட மேற்படி போக்குவரத்து போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று, மேற்படி ரவீந்தர்சிங்கை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து, விரைந்து ஆம்புலன்சை வரவழைத்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். ரவீந்தர் சிங் தற்போது நல்ல நிலையில் உள்ளார். போக்குவரத்து காவல் ஆளிநர்களின் மனிதாபிமான இச்செயலை அங்கிருந்து பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர்,இ.கா.ப., அவர்கள், காரில் மயங்கி கிடந்த நபரை மீட்டு, தக்க சமயத்தில் மருத்துவமனையில் சேர்த்து உயிரை காப்பாற்றிய, மேற்படி 6 காவல்ஆளிநர்களை (08.04.2024) நேரில் அழைத்து பாராட்டி, வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.