மதுரையில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த ஐந்து பேர் கைது
மதுரை மக்களவைத் தொகுதி தேர்தல் வாக்குப் பதிவையொட்டி போலீசார் நடத்திய தீவிர சோதனையில் நகரின் வெவ்வேறு பகுதிகளில் ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த ஐந்து பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர். மதுரையில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை ஏப்ரல் 19 நடைபெறுவதையொட்டி மாநகர காவல் துறைக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுமாறு காவல் ஆணையர் அவர்கள் உத்தரவிட்டார். இந்த நிலையில் கே. புதூர் காவல் நிலைய போலீசார் காந்திபுரம் கண்மாய் கரை அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது தப்பியோட முயன்ற இருவரை பிடித்து சோதனை செய்ததில் அவர்கள் நீண்ட வாளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. போலீசார் நடத்திய விசாரணையில் இருவரும் கே.புதூர் காந்திபுரம் பிரதான சாலையைச் சேர்ந்த ஜீவானந்தம் (20) சேதுபதி பாண்டியன் (20) என்பது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதே போல முத்துப்பட்டி பாண்டியன் நகரை அடுத்த யோக விநாயகர் கோவில் விரிவாக்க பகுதியில் சுப்பிரமணியபுரம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது பட்டாக்கத்தியுடன் சுற்றித்திரிந்த ரத்தினம் (31) என்பவரை கைது செய்தனர். மேலும் ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலைய போலீசார் ராமையா தெருவில் பட்டாகத்தியுடன் சுற்றித்திரிந்த மணி (19) என்பவரையும் கைது செய்தனர். இதே போல் கீரைத்துறை காவல் நிலைய போலீசார் மேல அனுப்பானடி பகுதியில் கண்காணித்தபோது அங்கு அரிவாள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் இருந்த காளி (37)என்பவரை கைது செய்தனர்.மதுரை நகரில் ஒரே நாளில் ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.