சென்னையில் திருடுபோன வாகனங்களைக் கண்டுபிடிக்க புதிய உக்தி!
வாகன திருட்டைக் கண்டுபிடிக்க சென்னை காவல்துறைக்கு புதிய உக்தி ஒன்று கைகொடுக்கும் என நம்பப்படுகிறது.
ஒருங்கிணைக்கப்பட்ட வாகன கண்காணிப்பு அமைப்பு மூலம், காணாமல் போன வாகனத்தின் பதிவு எண்ணை தரவுகளில் சேர்த்துவிட்டால், தொடர்ந்து சென்னையில் 28 பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் கண்காணிப்புக் கேமராக்கள் மூலம், அந்த வாகனம் எந்த இடத்தில் கடந்து சென்றாலும் உடனடியாக காவல்துறை வாட்ஸ்ஆப் எண்ணுக்கு தானாகவே தகவல் சென்றுவிடும் வகையில் தொழில்நுட்பம் கொண்டு வரப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த புதிய உக்தி மூலமாக மட்டுமே, ஒரு நாளைக்கு ஒன்று முதல் இரண்டு வாகன திருட்டுச் சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருவதாகவும் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். சென்னை மாநகரக் காவல்துறை மூலமாக அவர்களின் பயன்பாட்டுக்கென பிரத்யேகமாக ரூ.1.8 கோடியில் தயாரிக்கப்பட்டது ஐவிஎம்எஸ் எனப்படும் ஒருங்கிணைந்த வாகன கண்காணிப்பு அமைப்பு.
இந்த நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, திருடுப்போகும் வாகனங்கள் ஒரு வாரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு வரை, வாகன திருட்டுச் சம்பவங்களில், வாகனங்களைக் கண்டுபிடிக்க பல காலம் ஆகும். பல லட்சக்கணக்கான வழக்குகளில் வாகனங்கள் கண்டுபிடிக்கப்படாமலேயே கூட போகும் நிலையும் இருந்து வந்துள்ளது. அந்த வகையில் சுமார் 60 லட்சம் வாகனத் திருட்டு வழக்குகள் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தற்போது இதில் முதற்கட்டமாக 2021ஆம் ஆண்டு முதல் காணாமல் போன 3,200 வாகனங்களின் பதிவெண்களை தரவுகளை சேர்த்து, அவற்றை கண்டுபிடிக்கும் பணியில் இறங்கியிருக்கிறது.
அவ்வாறு காணாமல் போனதாக பதிவான வாகனத்தின் எண்ணை, இந்த கேமராக்கள் கண்டறிய நேர்ந்தால், அவற்றின் முழு விவரங்களுடன் காவல்துறை வாட்ஸ்ஆப் எண்ணுக்கு தகவல் வந்துவிடும். உடனடியாக அந்தப் பகுதியில் வாகனத்தை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 28 இடங்களில் நிலையான மற்றும் இயங்கும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள், வாகனங்கள் மற்றும் எண் பலகையை புகைப்படமும் எடுக்கும். இதனை, புலனாய்வு அதிகாரிகளிடம் கொடுத்து, அந்தவாகனம் எங்கிருக்கிறது என்று விசாரணை நடத்தி, உடனடியாக வாகனங்களைக் கண்டுபிடிக்க முயற்சி மேற்கொள்ளப்படவிருக்கிறது.
ஒவ்வொரு காவல் மாவட்டத்துக்கும், தனிப் பிரிவு அமைக்கப்பட்டு இந்த வாகனங்களின் தரவுகள், புகைப்படங்கள் அனுப்பி வைக்கப்பட்டு, அவர்கள் குற்றவாளிகளைப் பிடிக்கும் பணியை மேற்கொள்வார்கள். உதாரணமாக, கடந்த வாரம் பஜாஜ் பல்சர் வண்டி ஒன்று செயின்ட் தாமஸ் மவுண்ட் பகுதியில் காணாமல் போனதாகப் புகார் வந்தது. இந்த நிலையில், அந்த வாகனம் பாரிமுனை சந்திப்பைக் கடந்து சென்றதாக கண்காணிப்புப் கேமராக்கள் மூலம் கண்டறியப்பட்டு காவல்துறைக்குத் தானியங்கி தகவல் கிடைக்கப்பெற்றது. ஓரிரு நாள்களில் குற்றவாளி கைது செய்யப்பட்டு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வாகனத்தைத் திருடிய நபர்கள், அதனை வைத்து செயின் பறிப்பு, செல்போன் திருட்டு, கொள்ளை, கொலைச் சம்பவங்களுக்குப் பயன்படுத்தியதும் தெரிய வந்தது. இதுபோன்ற வழக்குகளில் ஐவிஎம்எஸ் மிக விரைவாக வாகனங்களைக் கண்டுபிடிக்க உதவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.