காதல் ஜோடிகளை விரட்டியடித்த போலீசார்.
நாகர்கோவில் பூங்காவில் காதல் ஜோடிகளை போலீசார் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாகர்கோவில், வேப்பமூடு சந்திப்பில் மாநகராட்சி பராமரிப்பில் சர்.சி.பி ராமசுவாமி ஐயர் நினைவு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. போதிய பராமரிப்பின்றி இந்த பூங்கா காணப்படுகிறது. இந்த பூங்காவில் ஒரு பகுதி வாகன பார்க்கிங் ஆக மாற்றப்பட்டுள்ளது. எஞ்சிய பல பகுதிகள் புதர்மண்டிய நிலையில் காணப்படுகிறது. இங்குள்ள விளையாட்டு உபகரணங்கள் உடைந்து தொங்குகின்றன, ஞாயிற்றுகிழமை விடுமுறை தினம் என்பதால் ஏராளமானோர் பூங்காவில் பொழுதை போக்குவதற்கு வருகை தந்திருந்தனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள், சிறுவர் சிறுமியர் என்று பூங்காவில் கூட்டம் நிரம்பி வழிந்தது
பலர் கொளுத்தும் வெயிலில் இருந்து காற்று வாங்குவதற்காகவும் நிழலில் வந்து அமர்ந்திருந்தனர். சிலர் பூங்காவில் உள்ள இருக்கைகள் படுத்து தூங்கிக்கொண்டிருந்தனர்.
பூங்காவில் சட்டத்திற்கு புறம்பாக செயல்கள் நடப்பதாக கூறி கடந்த ஆண்டு பூங்காவை சுற்றியிருந்த சிமென்ட் சுவரினால் ஆன காம்பவுண்ட் சுவர் இடிக்கப்பட்டு கம்பிகளால் ஆன வேலி மாநகராட்சியால் அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் பூங்காவில் ஏராளமான காதலர்கள் உலா வருவதை கண்ட போலீசார் நேற்று மதியம் பூங்காவில் அதிரடியாக நுழைந்து அவர்களை அங்கிருந்து துரத்தினர். காதல் ஜோடிகளின் அருகே சென்ற போலீசார் அவர்களை ஒருமையில் பேசி பெயர், முகவரிகளை கேட்டு விசாரித்தனர். போலீசார் துரத்துவதை கண்ட மற்ற காதல் ஜோடிகளும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.இதனை கண்டு பூங்காவில் அமைதியாக பொழுதை கழிக்க வந்த பொதுமக்களும் போலீசார் காதல் ஜோடிகளை துரத்துவதை கண்டு மிரண்டனர். மேலும் எதற்கு வம்பு என்று அவர்களும் அங்கிருந்து சிறிது நேரத்தில் வெளியேற தொடங்கினர். காதல் ஜோடிகள் சில பூங்காவில் அமர்ந்து சில்மிஷ செயல்களில் ஈடுபட்டதால் அவர்களை துரத்தியதாக போலீசார் தெரிவித்தனர். பூங்காவில் போலீசார் காதல் ஜோடிகளை துரத்திய சம்பவம் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
ச.அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர்.