Police Department News

நுங்கம்பாக்கம் ஓஎன்ஜிசி தலைமை மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை, பணம் திருட்டு: விடுமுறைக்கு ஊருக்குச் சென்ற நேரத்தில் மர்ம நபர்கள் கைவரிசை

ஓஎன்ஜிசி தலைமை மேலாளர் குடும்பத்துடன் ஊருக்குச் சென்ற நிலையில், அவர் வீட்டின் பூட்டை உடைத்த நபர்கள் நகை, பணத்தைத் திருடிச் சென்றனர்,

சென்னை நுங்கம்பாக்கம், மகாலிங்கபுரம், நாராயணம்மாள் தெருவில் வசிப்பவர் கிருஷ்ணன் (59). எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகையில் உள்ள ஓஎன்ஜிசி நிறுவனத்தில் தலைமை மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 6-ம் தேதி திருச்சியில் நடந்த உறவினர் இல்ல நிகழ்ச்சிக்குக் குடும்பத்தோடு புறப்பட்டுச் சென்றார்.

கிருஷ்ணன் ஊருக்குச் செல்லும் முன் வீட்டைப் பூட்டி விட்டுச் சென்றார். அருகிலுள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கவில்லை. வீட்டிலும் யாரும் இல்லாத நிலையில் அதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் உள்ள 25 சவரன் நகை, பணம், கேமரா ஆகியவற்றைத் திருடிச் சென்றனர்.

நேற்றிரவு 9 மணி அளவில் திருச்சியிலிருந்து வீடு திரும்பிய கிருஷ்ணன் மற்றும் குடும்பத்தார் வீட்டைத் திறக்க முயன்றபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து நுங்கம்பாக்கம் போலீஸாருக்குப் புகார் அளித்துள்ளனர்.

பின்னர் வீட்டைத் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் உள்ளே இருந்த 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு இருந்ததைப் பார்த்தனர். சம்பவ இடத்திற்கு வந்த நுங்கம்பாக்கம் போலீஸார் சிசிடிவி காட்சிகளைச் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை உள்ளிட்ட தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published.