புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் 17 பவுன் தங்க நகைகளை கண்டெடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண்ணை காவல் துறை அதிகாரிகள் பாராட்டினர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பேருந்து நிலையம் அருகே நேற்றிரவு (ஜன.19) 17 பவுன் தங்க நகைகள், 500 ரூபாயுடன் கைப்பை ஒன்று கேட்பாரற்று கிடந்துள்ளது. இதை அவ்வழியே சென்ற திருமயத்தைச் சேர்ந்த நாடியம்மாள் என்பவர் எடுத்து திருமயம் ஊராட்சி மன்றத் தலைவர் சிக்கந்தரிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து, அவர்கள் நகைகளை திருமயம் காவல் நிலையத்தில் சிக்கந்தர் ஒப்படைத்தார்.
கேட்பாரற்றுக் கிடந்த தங்க நகைகள், திருமயம் அருகே உள்ள அம்மாபட்டி கிராமத்தைச் சேர்ந்த மீனாள் என்பவருக்கு சொந்தமானது எனத் தெரியவந்தது.
இதையடுத்து பொன்னமராவதி காவல் துணைக் கண்காணிப்பாளர் தமிழ்மாறன், திருமயம் காவல் ஆய்வாளர் மனோகர் ஆகியோர் நகை, ரொக்கம் அடங்கிய கைப் பையை மீனாளிடம் ஒப்படைத்தனர். மேலும், இதுபோன்று கவனக் குறைவின்றி செயல்படக் கூடாது என அவரிடம் அறிவுறுத்தினர். மனிதநேயம் மிக்க செயலில் ஈடுபட்ட நாடியம்மாள், சிக்கந்தர் ஆகியோரை காவல் துறை அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.