புதுக்கோட்டை: கந்தர்வகோட்டை அருகே உள்ள ஆதனக்கோட்டை வண்ணாரப்பட்டியில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து, அங்கிருந்து திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு சிறிய வாகனங்களில் எடுத்து சென்று விற்பனை செய்யப்பட்டு வருவதாக புதுக்கோட்டை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.இளங்கோவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வராஜ் உத்தரவின்படி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.இளங்கோ மற்றும் காவல்துறையினர் நேற்று நள்ளிரவு சுமார் 1 மணியளவில் கணபதிபுரத்தில் உள்ள சம்பந்தப்பட்ட பண்ணை வீட்டில் சோதனை செய்தனர்.
அப்போது அந்த வீட்டில் சுமார் 500 பெட்டிகளில் சுமார் 23 ஆயிரத்து 204 புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.இளங்கோ மதுபாட்டில்கள் மற்றும் சாராயத்தை பறிமுதல் செய்து 2 சரக்கு வாகனங்களில் புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்தில் உள்ள மதுவிலக்கு பிரிவு காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தார்.
பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களின் மதிப்பு சுமார் ரூ.11 லட்சம் இருக்கும் என காவல்துறையினர் தெரிவித்தனர். தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பண்ணை வீடு இருந்த இடம் ஒரு வக்கீலுக்கு சொந்தமான என்றும், இங்கிருந்து பல மாதங்களாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மதுவிலக்கு பிரிவு காவல்துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை சேர்ந்த அருண் (25) என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த மற்றொருவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். காவல்துறையினர் தேடும் நபர் கிடைத்தால், இந்த வழக்கில் மேலும் கூடுதல் தகவல்கள் கிடைக்கும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.