திருநெல்வேலி: தென்காசியில் இருந்து கோவில்பட்டிக்கு லாரியில் மணல் கடத்துவதாக திருவேங்கடம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் திருவேங்கடம் காவல் உதவி- ஆய்வாளர்கள் திரு.ராஜா, திரு.மாரிச்செல்வம் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சங்கரன்கோவில் பகுதியில் இருந்து வேகமாக வந்த லாரியை நிறுத்துமாறு காவல்துறையினர் சைகை காட்டினர்.
ஆனால் லாரி நிற்காமல் நேராக உதவி- ஆய்வாளர்கள் திரு.ராஜா, திரு.மாரிச்செல்வம் மீது மோதுவது போல் வேகமாக வந்தது. உடனே இருவரும் சுதாரித்துக் கொண்டு உயிர் தப்பினர். இதனை தொடர்ந்து அந்த லாரியை காவல்துறையினர் விரட்டிச் சென்றனர். சிறிது தூரத்தில் லாரியை நிறுத்திவிட்டு, அதில் இருந்தவர்கள் கீழே இறங்கி தப்பிச் செல்ல முயற்சித்தனர். காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில், லாரி டிரைவர் தென்காசி சிவராமபேட்டை வடக்கு தெருவை சேர்ந்த மணிகண்டன் (40) கிளீனர் தென்காசி மலையான் தெருவை சேர்ந்த முத்துராமலிங்கம் (30) என்பதும் தெரியவந்தது. தென்காசியில் இருந்து மணல் கடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. திருவேங்கடம் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) திரு.கண்ணன் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் இருவரையும் கைது செய்தார். மணலுடன் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.