பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 15 வயது சிறுமியை மீட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையாளர் தலைமையிலான தனிப்படை போலீசாரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை பகுதியில் வசித்து வந்த 15 வயது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார், வ/23, த/பெ.பொன்னுசாமி என்பவர் பலமுறை பாலியல் வன் கொடுமை செய்து திருமணம் செய்ய வேண்டும் என்ற நோக்குடன் கடந்த 11.02.2020 அன்று இரவு சென்னைக்கு கடத்தி வந்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து சென்னை பெருநகர காவல் துறைக்கு தகவல் அளித்தனர்.
மேற்படி குற்றவாளியை விரைந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் உத்தரவிட்டதன் பேரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையாளர் திருமதி.H.ஜெயலெட்சுமி அவர்கள் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டு சென்னை மாங்காடு, போரூர், கோயம்பேடு, வடபழனி, அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, அம்பத்தூர் பகுதியில் பதுங்கியிருந்த ஜெயக்குமார், என்பரை கைது செய்தனர். அவரிடமிருந்து மேற்படி 15 வயது சிறுமியை பத்திரமாக மீட்டனர்.
துரிதமாகவும் விரைவாகவும் செயல்பட்டு மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்து சிறுமியை மீட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையாளர் திருமதி.H.ஜெயலெட்சுமி, காவல் ஆய்வாளர் திரு.முருகேசன், அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.C.கலா, அடையார் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.R.காமாட்சி, ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.J.ஞானசெல்வம், ஆயுதப்படை காவலர்கள் திரு.A.பாலசுப்பிரமணியன், திரு.P.தேவன், முதல்நிலைக்காவலர் திருமதி.வானமாதேவி, அரும்பாவூர் காவல் நிலைய காவலர் திரு.விமலநாதன் ஆகியோரை 14.02.2020 அன்று சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.