அண்ணா சாலையில் கொடுக்கல் வாங்கல் தகராறில் வியாபாரியைக் காரில் கடத்திச் சென்று தாக்கிய கும்பலை போலீஸார் சென்று மடக்கி விசாரித்தனர். அப்போது அந்த கும்பல் ஆய்வாளரைத் தாக்கியுள்ளது. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராயப்பேட்டை, செல்லப் பிள்ளையார் கோயில் தெருவில் வசிப்பவர் பைசுதீன் (48). இவர் ஆயிரம் விளக்கில் சொந்தமாக ஹெல்மெட் விற்கும் கடை வைத்துள்ளார். இவர் மதுரையைச் சேர்ந்த ராஜா உசேன் (48) என்பவரிடம் 6 மாதம் முன் ரூ.10 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதைத் தராமல் இழுத்தடித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக ராஜா உசேன் (48), அவரது மகன் முகமது சபியுல்லா (27), திருச்சியைச் சேர்ந்த ரஹ்மத்துல்லா (25), முஹமது தவுபிக் (22), ஆசிப் கான் (22) ஆகியோர் ஒரே காரில் சென்னை வந்துள்ளனர்.
இரவு சுமார் 11 மணி அளவில் அண்ணா சாலை புகாரி ஹோட்டலில் உணவருந்திய அவர்கள், பணம் வாங்கிய பைசுதீனை அழைத்துள்ளனர். அப்போது பைசுதீன் பணத்தைத் திருப்பித் தருவதற்கு அவகாசம் கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ராஜா உசேன் மகன் முகம்மது சபியுல்லா திடீரென பைசுதீனைத் தாக்கியுள்ளார். பின்னர் அவரை காரில் வலுக்கட்டாயமாக ஏற்றிக்கொண்டு சென்றுள்ளனர்.
இதைப் பார்த்த பொதுமக்களில் சிலர் காவல் கட்டுப்பாட்டறைக்குப் புகார் அளித்து காரின் எண், நிறம் ஆகியவற்றைக் குறிப்பிட்டுள்ளனர். இதையடுத்து திருவல்லிக்கேணி போலீஸார் காரைத் தேடிச் சென்றனர். அப்போது ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே கார் நிற்பதும் அதில் பைசுதீனை மற்றவர்கள் நிறுத்தி வைத்து பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து அவர்களை விசாரித்துள்ளனர்.
அப்போது காரில் வந்த ராஜா உசேன் உள்ளிட்ட ஐந்து பேருக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ராஜா உசேன் ஆய்வாளரைப் பிடித்துத் தாக்கியதோடு, அவரைத் தள்ளிவிட்டுள்ளார்.
இதையடுத்து அவர்கள் ஐந்துபேரையும் போலீஸார் கைது செய்தனர். ராஜா உசேன் ஒரு அரசியல் கட்சியில் இருப்பதும், அவர் மீது ஏற்கெனவே சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு ஒன்று இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ராஜா உசேன் இதுபோன்று சென்னையில் பல பேருக்கு வட்டிக்குப் பணம் கொடுத்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து பைசுதீன் அளித்த புகாரின் பேரில் திருவல்லிக்கேணி போலீஸார் ஐபிசி 147 (கலகம் செய்தல்), 148 (பயங்கர ஆயுதங்களுடன் கலகம் செய்தல்), 341 (ஒரு நபரைச் செயல்பட விடாமல் தடுத்தல்), 294 (b) (அவதூறாகப் பேசுதல்), 323 (காயம் விளைவித்தல்), 363 (ஆட்கடத்தல்), 506 (ii) (ஆயுதங்களுடன் கொலை மிரட்டல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஐவரையும் சிறையில் அடைத்தனர்.