கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அனைத்து மதத் தலைவர்களும் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் க.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், அதைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், தலைமைச் செயலாளர் க.சண்முகம் தலைமையில், மதத் தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில், முஸ்லிம்கள் சார்பில் சுன்னத் பிரிவின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப், ஷியா முஸ்லிம் தலைமை காஜி குலாம் முகமது மஹாதிகான், ஆற்காடு இளவரசர் முகமது அப்துல் அலி உள்ளிட்ட 7 பேரும், கிறிஸ்தவர்கள் சார்பில் சென்னை – மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி உள்ளிட்ட 9 பேர், இந்து மதத்தில் ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாபித் சார்பில் சுவாமி சுகதேவானந்தா உள்ளிட்ட 7 பேர், குருநானக் சத்சங் சபா சார்பில் அதன் பொதுச்செயலாளர் பல்பீர் சிங், புளியந்தோப்பு ஜெயின் சங்க செயலர் அஜித் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும், உள்துறை செயலர் எஸ்.கே.பிரபாகர், வருவாய்த் துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, பொதுத்துறை செயலர் செந்தில்குமார், காவல்துறை தலைமை இயக்குநர் ஜே.கே.திரிபாதி, சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு பிரிவினருடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதில், கரோனா தடுப்பு தொடர்பாக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரையும் தலைமைச் செயலர் சண்முகம் கேட்டுக் கொண்டார். மேலும், மத ரீதியிலான விமர்சனங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
அதை ஏற்றுக் கொண்ட மதத் தலைவர்கள், ‘‘கரோனா தடுப்பில் அரசுடன் இணைந்து செயல்படவும், முழு ஒத்துழைப்பு அளிக்கவும் தயாராக உள்ளோம்’’ என்று் உறுதியளித்தனர்.