குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடு வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி 102 பேரிடம் ரூ.29 லட்சம் பெற்று மோசடி செய்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள பெண்ணைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை பாடி, சக்தி நகர், பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் மகாலட்சுமி (43). இவருக்கும் வடபழனியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி செய்து வரும் ஓட்டேரியைச் சேர்ந்த மேகலா என்ற பர்வீனுக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது.
அப்போது, மகாலட்சுமி தனக்கு சொந்தமாக வீடு இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தனது விரக்தியைத் தெரிவித்துள்ளார். இதற்கு பதில் அளித்த மேகலா தனக்கு அரசு அதிகாரிகள் பலரைத் தெரியும் என்றும் அவர்கள் உதவியுடன் அயப்பாக்கத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடு வாங்கித் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதற்கு முன் பணமாக ரூ.1 லட்சம் கொடுத்தால் போதும் என்று தெரிவித்துள்ளார். இதனால், உற்சாகம் அடைந்த மகாலட்சுமி தனது நகைகளை அடமானம் வைத்தும், தெரிந்த நண்பர்களிடம் கடன் வாங்கியும் முதல் கட்டமாக மேகலாவிடம் ரூ.60 ஆயிரம் கொடுத்துள்ளார்.
ஆனால், மேகலா உறுதி அளித்தபடி குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் வீடு வாங்கிக் கொடுக்கவில்லை. வாங்கிய பணத்தையும் திருப்பி செலுத்தவில்லை. இதனால், வேதனை அடைந்த மகாலட்சுமி இது குறித்து ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
தனிப்படை அமைப்பு
உதவி ஆணையர் விஜயானந்த் மேற்பார்வையில் ஓட்டேரி ஆய்வாளர் முகமது லாசர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினார். இதில், மகாலட்சுமியிடம் மட்டும் அல்லாமல் மேலும் 101 பேரிடம் மேகலா, ரூ.29 லட்சத்து 30 ஆயிரம் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மேகலாவின் கூட்டாளி செம்பியம் பகுதியைச் சேர்ந்த மனோகரன் (62), மேகலா வின் மகன் ரஸ்லீ (25) ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மேகலாவைக் கைது செய்ய தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது.
மோசடி குறித்து உதவி ஆணையர் விஜயானந்த் கூறும்போது, அயப்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடு வாங்கித் தருவதாக மேகலா கூறிய ஆசை வார்த்தைகளை நம்பி மகாலட்சுமி பணம் கொடுத்துள்ளார்.
மேலும், தனக்கு தெரிந்த நபர்களுக்கும் குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கித் தருவதாக கூறி பணம் வசூல் செய்து அதை மேகலாவிடம் கொடுத்துள்ளார். மொத்தம் ரூ.29 லட்சத்து 30 ஆயிரம் வசூல் செய்து கொடுத்துள்ளார்.
பணத்தை பெற்றுக் கொண்ட மேகலா யாருக்கும் குடியிருப்பில் வீடு வாங்கி கொடுக்காமல் அனைவரையும் மொத்தமாக ஏமாற்றியுள்ளார். அவரது கூட்டாளிகளைக் கைது செய்துள்ளோம். அவரைத் தேடி வருகிறோம். இந்த விவகாரத்தில் அரசு அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது என்றார்.
யாரையும் நம்ப வேண்டாம்
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, இதுபோல் மோசடிப் பேர்வழிகளை யாரும் நம்பி பணம் கொடுக்க வேண்டாம். அதற்கென உள்ள அரசு அதிகாரிகளிடம் நேரில் சென்று விசாரித்து அதன் பிறகே அடுத்த கட்ட முடிவை எடுக்க வேண்டும். மாறாக யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றனர்.