Police Department News

பாலியல் தொல்லை அளித்ததாக மதரஸா மேலாளர் கைது: உ.பி. போலீஸ் சோதனையில் 51 மாணவிகள் மீட்பு

உ.பி.யின் மதரஸாவில் பாலியல் தொல்லை அளித்ததாக அதன் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். போலீஸார் நடத்திய சோதனையில் அதில் தங்கிப் பயிலும் 51 மாணவிகள் மீட்கப்பட்டுள்ளனர்.

உ.பி.யின் தலைநகரான லக்னோவில் பழைய நகரப் பகுதியில் யாசிர்கன்ச் அமைந்துள்ளது. இங்கு ‘ஜாமியா கதிஜத்-உல்- குப்ரா லிலாப்நத்’ எனும் பெயரில் ஏழை பெண்களுக்கான ஒரு மதரஸா அமைந்துள்ளது. இதன் மேலாளரான முகம்மது தையப் ஜியா என்பவரால் நிர்வாகிக்கப்பட்டு வருகிறது. அதன் மாணவிகளுக்கான விடுதியிலேயே தங்கி இருக்கும் ஜியா அன்றாடம் மாணவிகளை அழைத்து பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். இதை எவரும் வெளியில் கூறாதபடி அனைவரையும் ஜியா மிரட்டி வைத்துள்ளார். மேலும், மாணவிகளை வெளியில் அனுப்பாமலும், வெளியில் இருப்பவர்களும் உள்ளே வராதபடியும் சிறை போல் மதரஸா விடுதியை நடத்தி உள்ளார். கைப்பேசிகளை பயன்படுத்தவும் மாணவிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால், அந்த மதரஸா நகரின் முக்கியப் பகுதியில அமைந்திருந்தும் உள்ளே நடப்பது தெரியாமல் இருந்துள்ளது.

இந்தநிலையில், பாதிக்கப்பட்ட மாணவிகளில் சிலர் தமது தொல்லைகளை பற்றி கடிதமாக எழுதி உள்ளனர். இவற்றை திரைப்பட பாணியில் அதை கசக்கி குப்பையை போல் ஜன்னல் வழியாக வெளியில் தூக்கி எரிவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர். இவற்றை பெரும்பாலும் குப்பை என்றே பலரும் கவனம் செலுத்தாமல் இருந்துவிட்டனர். எனினும், அப்பகுதிவாசியான மோசின் கான் மட்டும் சந்தேகம் கொண்டு அதை தொடர்ந்து படித்து வந்துள்ளார். பிறகு அந்த கடிதங்களை அப்பகுதியின் ஷஹாதத்கன்ச் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இதை அடுத்து அக்காவல் நிலையப் போலீஸார் நேற்று முன்தினம் இரவில் அந்த மதரஸாவில் திடீர் சோதனை நடத்தினர். இதில், ஜியாவின் சுயரூபம் வெளியாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து ‘தி இந்து’விடம் லக்னோ மாவட்ட காவல்துறை சிறப்பு கண்காணிப்பாளரான தீபக் குமார் கூறும்போது, ”மதரஸாவில் 125 பேர் பயின்றாலும் சோதனையின் போது 51 மாணவிகள் மட்டும் இருந்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் பகல் நேரங்களில் பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதை உறுதி செய்து மேலாளர் ஜியா கைது செய்யப்பட்டுள்ளார். இவர், சில மாணவிகளை இரவு நேரங்களில் அழைத்து தம் முன் நடனமாடும்படியும் தொல்லை அளித்துள்ளார். இந்தத் தகவல் உ.பி. அரசின் குழந்தைகள் மேம்பாட்டு குழுவிற்கும் அளிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது” எனத் தெரிவித்தார்.

சனிக்கிழமை காலை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யபப்ட்ட ஜியா 14 நாட்களுக்காக நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார். இந்த தகவல் வெளியான பின் உ.பி. அரசு சிறுபான்மை கல்வித்துறை சார்பிலும் மதரஸாவின் அங்கீகாரம் தொடர்பான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் மாணவிகளிடம் விசாரணை செய்து அவர்கள் பெற்றோர்களிடம் ஒப்படைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.