ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்திச் செல்லப் பயன்படுத்தப்பட்ட லாரியின் உரிமையாளர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 27 ஆம் தேதி பூந்தமல்லி நசரத்பேட்டை அருகே போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆந்திராவில் இருந்து கேரளாவை நோக்கி ரப்பர் ஏற்றி வந்த லாரியை மடக்கி சோதனையிட்டனர். இதில் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 270 கிலோ கஞ்சா அந்த லாரியில் கடத்திச் செல்லப்படுவதை கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து, லாரியைப் பறிமுதல் செய்த போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் போலீசார், அதன் உரிமையாளரான சேலம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ், ஓட்டுநர், கிளீனர் ஆகிய மூவரையும் கைது செய்தனர். இந்நிலையில், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் படி, கஞ்சா கடத்தப் பயன்படுத்தப்பட்ட லாரியின் உரிமையாளர் செல்வராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.