Police Department News

மனநல மருத்துவமனை வார்டன் கொலை: குடி நோயாளிகள் 4 பேர் கைது

தஞ்சாவூர் அருகே மனநல மருத்துவமனை வார்டனை கொலை செய்துவிட்டு, தப்பியோடிய குடி நோயாளிகள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் வல்லத்தை அடுத்த சென்னம்பட்டி கிராமத்தில் மனநல மருத்துவர் ராதாகிருஷ்ணன் என்பவர், மனநல மருத்துவமனை நடத்தி வருகிறார். இங்கு மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், குடி போதைக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த மையத்தில் உள்நோயாளிகளாக சுமார் 80 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகில் உள்ள உக்கடை கிராமத்தைச் சேர்ந்த ஜோதிராமலிங்கம் (45) என்பவர் இந்த மையத்தின் வார்டனாக பணிபுரிந்து வந்தார். நேற்று காலை வழக்கம்போல மருத்துவர் ராதாகிருஷ்ணன், தஞ்சையில் உள்ள தனது வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு காரில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, தனது மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வந்த அரியலூர் மாவட்டம் உட்கோட்டையைச் சேர்ந்த அஜித்குமார் (22), தஞ்சாவூரை மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன், காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு பால்சாமி (32), தஞ்சாவூர் மாவட்டம் வெட்டுவாக்கோட்டை அருண்பாலாஜி (20) ஆகிய 4 பேரும் மருத்துவமனை சீருடையில் வல்லம் பேருந்து நிலையத்தில் நிற்பதை ராதாகிருஷ்ணன் பார்த்துள்ளார்.

அவர்களிடம் பேசி, 4 பேரையும் காரில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றார் ராதாகிருஷ்ணன். அங்கு, வார்டன் ஜோதிராமலிங்கம் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதைப் பார்த்த ராதாகிருஷ்ணன், இதுகுறித்து வல்லம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.

போலீஸார் நடத்திய விசாரணையில், வல்லம் பேருந்து நிலையத்தில் இருந்த 4 பேரும், மருத்துவமனையில் நேற்று அதிகாலை தூங்கிக்கொண்டிருந்த வார்டன் ஜோதிராமலிங்கத்தை, துணியால் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, அவரிடம் இருந்த சாவியை எடுத்து கதவைத் திறந்து தப்பிச் சென்றது தெரியவந்தது. அவர்கள் 4 பேரும் கஞ்சா, மது போதைக்கு அடிமையாகி, சிகிச்சை பெற்று வந்தவர்கள் என்பது தெரியவந்தது.

போலீஸார், ஜோதிராமலிங்கத்தின் உடலை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து அஜித்குமார் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.