Police Department News

ரூ.10 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் அலுவலக குண்டுவெடிப்பு குற்றவாளி கைது: 24 ஆண்டுகளுக்குப் பின் சிபிஐ பிடித்தது

993-ல் 11 பேர் உயிரிழப்புக்குக் காரணமாக அமைந்த சேத்துப்பட்டு ஆர்.எஸ்.எஸ் குண்டுவெடிப்பு வழக்கில் 24 ஆண்டு தலைமறைவாக இருந்த குற்றவாளியை சிபிஐ கைது செய்துள்ளது.

சேத்துப்பட்டு ஹாரிங்கடன் சாலையில் ஆர்.எஸ்.எஸ் தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு கடந்த 1993-ம் ஆண்டு ஆகஸ்ட் 8 அன்று மதியம் 1.45 மணி அளவில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் 11 பேர் கொல்லப்பட்டனர். 7 பேர் காயமடைந்தனர். கட்டிடம் சேதமடைந்தது.

இந்த வழக்கு பற்றி எழும்பூர் போலீஸார் விசாரணை நடத்தினர், பின்னர் சிபிசிஐடி போலீஸாருக்கு வழக்கு மாற்றப்பட்டு அதன் பின்னர் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.

தடா பிரிவின் கீழ் 18 பேரை கைது செய்த சிபிஐ அவர்கள் மீது 120-B r/w 302, 324, 326, 419, 436, 201, 153-A, 109 & 34 of IPC, Sec.9 B(1)(b) of Explosives Act, Sec. 3,4,5 and 6 of Explosives Substances Act and Sec. 3 (1), 3(2), 3(3) & 3(4) of TADA(P) Act, ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, 1994 ஜூன் 8-ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்த வழக்கில் இமாம் அலி, அல் உம்மா இயக்கத்தலைவர் பாஷா, பழனி பாபா, நஜிமுதின் உள்ளிட்ட பலர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இதில் வழக்கு நடந்து கொண்டிருந்த போது போலீஸ் காவலில் இருந்து தப்பித்த இமாம் அலி 2002-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பெங்களூரு என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார். பழனிபாபாவும் 1997-ல் கொல்லப்பட்டார்.

15 பேர் மீதான வழக்கு விசாரணை ஐகோர்ட் வளாகத்தில் உள்ள, தடா நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 15 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். பாட்ஷா, முக்தார் அகமது, அமினுதீன் ஷெரீப், முகமது அஸ்லாம் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று விடுதலை செய்யப்பட்டனர்.

மற்றவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது. அதிலும் சிலர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் முஹமது முஷ்தாக் குற்றவாளிகளுக்கு தங்க இடம் ஏற்படுத்திக் கொடுத்ததாகவும், பின்னர் குண்டுவெடிப்புக்குப் பின் அவர்களை பாதுகாத்து தங்க வைத்து தப்பிக்க வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

24 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த முஷ்தாக்கை பிடித்தால் தான் வழக்கு முடிவுக்கு வரும் என்பதால், அவரை பிடித்துக் கொடுத்தால் ரூ.10 லட்சம் சன்மானம் என்று சிபிஐ அறிவித்தது. இந்நிலையில் இன்று சென்னையில் தலைமறைவாக இருந்த முஹமது முஷ்தாக்கை சிபிஐ அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர்.

இதன் மூலம் கடைசியாக தேடப்பட்டு வந்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த சிபிஐ தரப்பு, விரைவில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.