பெரியபாளையம்,
காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. சாமுண்டீஸ்வரி உத்தரவின் பேரில், திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் மேற்பார்வையில் திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்பவர்களை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து நேற்றுமுன்தினம் திருவள்ளூர் தாலுகா போலீசார் காக்களூர் ஏரிக்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த காக்களூர் ஏரிக்கரை பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது 29) அரவிந்த் (25) ஆகியோர் தடை செய்யப்பட்ட போதைப்பொருளான கஞ்சாவை ஆந்திராவில் இருந்து திருட்டுத்தனமாக கடத்தி வந்து திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதியில் விற்பனை செய்வதற்காக பதுக்கிய ஒரு கிலோ 100 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
இதை தொடர்ந்து போலீசார் ரமேஷ் மற்றும் அரவிந்தை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய 3 பேரை தாலுகா போலீசார் தேடி வருகின்றனர்.
அதேபோல கடம்பத்தூர் போலீசார் திருவள்ளூரை அடுத்த கசவ நல்லாத்தூர் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது அங்கிருந்த கசவநல்லாத்தூரை சேர்ந்த சுரேஷ் (23) என்பவர் ஆந்திராவிலிருந்து திருட்டுத்தனமாக கஞ்சாவை கொண்டு வந்து அதனை பாக்கெட்டுகளாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 120 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
அதே போல் பெரியபாளையம் அருகே உள்ள கன்னிகைபேர் கிராமத்தில் பெரியபாளையம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன் தலைமையில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது கன்னிகைபேர் மாதா கோவில் தெருவில் 2 வாலிபர்கள் சந்தேகத்துக்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் வைத்திருந்த பையில் 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக மறைத்து வைத்து இருந்ததை கண்டுப்பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், பிடிபட்டவர்கள் கன்னிகைபேர் கிராமத்தைச் சேர்ந்த முருகன் (23), ராகுல்(21) என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார், ஊத்துக்கோட்டை முதல்நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அதே போல் வெங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேல் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது வெங்கல் ஏரிக்கரை பகுதியில் ஒருவர் சந்தேகத்துக்கு இடமான வகையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அவரை போலீசார் மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.
அதில், அவர் வைத்திருந்த பையில் 500 கிராம் எடை கொண்ட கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை வைத்திருந்த வெங்கல் ஒட்டர்பாளையத்தை சேர்ந்த செல்வகுமார்(28) என்பவரை கைது செய்து திருவள்ளூர் முதல்நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்