Police Department News

ஆந்திராவில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்னைக்கு கஞ்சா கடத்த முயன்ற 7 வாலிபர்களை போலீசார் மடக்கி கைது செய்தனர்.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள நவீன ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் நேற்று ஆரம்பாக்கம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிளை போலீசார் மடக்கி நிறுத்தி சோதனை செய்தனர். அந்த மோட்டார் சைக்கிளில் இருந்த மொத்தம் 1 கிலோ 200 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்களை ஆந்திர மாநிலம் நாயுடுபேட்டையில் இருந்து சென்னைக்கு கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது.

இது குறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்த முயன்றதாக சென்னையை சேர்ந்த மணிகண்டன் (வயது 20), பாலசத்யா (20), விஜய் (25) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1¼ கிலோ கஞ்சா பொட்டலங்களையும், ஒரு மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதே போல் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த புதுவாயல் சந்திப்பில் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்களை போலீசார் மடக்கி நிறுத்தி சோதனை செய்தனர். அந்த மோட்டார் சைக்கிள்களில் மொத்தம் 2 கிலோ 300 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் ஆந்திர மாநிலம் நாயுடுபேட்டையில் இருந்து சென்னைக்கு கடத்துவது தெரியவந்தது.

இது குறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள்களில் கஞ்சா கடத்தியதாக சென்னை மேற்கு சைதாப்பேட்டையை சேர்ந்த திவாகர் (21), கமலேஷ் (21), பீகாரை சேர்ந்த ரவீந்தரகுமார் (27), தினேஷ்யாதவ் (34) ஆகியோரை கைது செய்து கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றினர்.

Leave a Reply

Your email address will not be published.