திண்டுக்கல்: திண்டுக்கல் பாரதிபுரம் சந்தைரோட்டை சேர்ந்த மணிகண்டன் மகன் விக்னேஷ் என்ற விக்கி (21). இவருக்கு திருமணமாகி 2 மாதங்களே ஆகிறது. இவர் நாகல்நகர் ரவுண்டானா அருகே உள்ள ஒரு தள்ளுவண்டி கடையில் வேலை பார்த்து வந்தார்.
இந்தநிலையில், நேற்று முன்தினம் விக்னேஷ் கடையில் இருந்தபோது அங்குவந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடினர். மக்கள் அதிகம் கூடும் இடத்தில் நடந்த இந்த கொலை சம்பவம் திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக நகர் தெற்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்தநிலையில், விக்னேசை கொலை செய்ததாக திண்டுக்கல் என்.எஸ்.கே. நகரில் கோழிக்கடை நடத்திவரும் யுவராஜ் (22) உள்பட 5 பேரை நேற்று காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர். இதுதொடர்பாக காவல்துறையினர் கூறியதாவது:-
கொலை செய்யப்பட்ட விக்னேசும், அதே பகுதியை சேர்ந்த செந்திலும் (28) நண்பர்கள் ஆவர். செந்திலின் உறவினரான மீனாவுக்கும் (23), யுவராஜுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதனை செந்தில் கண்டித்தார். ஆனால், கள்ளத்தொடர்பை கைவிடாததால் செந்தில், விக்னேஷ் ஆகியோர் சேர்ந்து யுவராஜை கண்டித்துள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் விக்னேஷ், யுவராஜை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர், விக்னேசை தீர்த்து கட்ட முடிவு செய்தார். இதுகுறித்து தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (23), முனீஸ்வரன் (23), பிரசாந்த் (24), மணிகண்ட பிரபு (24) ஆகியோரிடம் யுவராஜ் தெரிவித்தார். அதன்படி நேற்று முன்தினம் மாலை 5 பேரும் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் விக்னேசை வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பி ஓடினர். பின்னர் குள்ளனம்பட்டி அருகே பதுங்கி இருந்த 5 பேரையும் நேற்று கைது செய்தோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கைதான 5 பேரும், திண்டுக்கல் 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு தீபா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.