Police Department News

லஞ்சப் புகாரில் சிக்கிய கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர்: பின்னணி விவரங்கள்

கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் கணபதி, லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் சிக்கிய விவரத்தின் பின்னணியில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் 17ம் தேதி பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக நியமனம் செய்யப்பட்டவர் கணபதி. பாரதியார் பல்கலைக்கழக பல்வேறு துறைகளில் 82 பணியிடங்கள் நிரப்ப 2016 ஆகஸ்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர்.

 

நேர்முகத் தேர்வில் முன்னுக்கு பின் முரணான தேதிகள் அறிவித்ததால் அப்போதே முறைகேடு குற்றச்சாட்டு எழுந்தது. ஆளுநர், உயர்கல்வி செயலர் புகார்கள் தெரிவிக்கப்பட்டன. ஒரு பணியிடத்துக்கு பல லட்சங்கள் பெறப்பட்டதாக கூறப்பட்டது. அதையும் மீறி நவம்பர் மாதம் பணியிடங்கள் நிரப்பப்பட்டன.

பணி நியமனம் வழங்கும் முன்பாக, அதை நிறுத்தி வைக்க உயர் கல்வித்துறை கடிதம் அனுப்பியது. ஆனால் அதையும் மீறி நியமனம் ஆணை வழங்கப்பட்டது. இதையடுத்து அப்போதைய பதிவாளர் மோகன், துணைவேந்தர் இருவரும் மாறி மாறி புகார்களை தெரிவித்து கொண்டனர். இதனால் மோகன் பதிவாளர் பொறுப்பிலிருந்து விலகினார். வனிதா என்பவர் பதிவாளராக நியமிக்கப்பட்டார்.

 பல்வேறு தரப்பில் இருந்தும் துணை வேந்தருக்கு எதிர்ப்பு எழுந்தது. பேராசியர்கள் தரப்பிலிருந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனிடையே கோவை நவாவூரை சேர்ந்த லட்சுமி பிரபா பணியிட நியமன முறைகேடு தொடர்பாக உயர்கல்வித்துறை, ஆளுநர் உள்ளிட்டோருக்கு மனு அனுப்பினார்.

அவரது கணவர் 1978ல் பல்கலைகழகத்துக்கு நிலம் வழங்கியதன் பேரில் ஓட்டுநர் வேலை பெற்றார். லட்சுமி பிரபாவின் புகாரை அடுத்து அவரது கணவர் வேலை நீக்கம் செய்யப்பட்டார்.

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய அறிவுறுத்தல் பேரில் துணைவேந்தர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் சுரேஷ் என்பவர் உதவி பேராசியர் பணி வாய்ப்புக்காக ரூ.30 லட்சம் கொடுத்ததாக புகார் எழுந்தது. இன்று பல்கலைக்கழக நிகழ்ச்சியின் போது அருகாமையில் இருந்த தனது வீட்டுக்கு வந்த துணை வேந்தர் கணபதியை லஞ்ச ஒழிப்புத்துறைத்துறை போலீஸார் அழைத்துச் சென்று அவரை வீட்டில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.